Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM

எஸ்சி எஸ்டிக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு நிர்வாகத்தின் செயல் திறனை பாதிக்காது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி

பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதால் அரசு நிர்வாகத்தின் செயல்திறன் பாதிக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் தனது கொள்கைக்கு ஆதரவாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் தொடர்பான புள்ளிவிவரத்தையும் தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:

பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதால் அரசு நிர்வாகத்தின் செயல்திறன்கள் பாதிக்காது. ஏனென்றால் செயல் திறனுக்கான அளவுகோலை நிறை வேற்றும் மற்றும் தகுதியானவர் என அறிவிக்கப்படும் அதிகாரி களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்.

வருடாந்திர செயல்திறன்

பதவி உயர்வை உறுதிப் படுத்தும் போது, வருடாந்திர செயல் திறன் மதிப்பீடு செய்யப்படு கிறது. பதவி உயர்வு தொடர்பான விஷயங்களை பரிசீலிக்கும்போது, சம்பந்தப்பட்ட துறையின் பதவி உயர்வுக் குழுவானது பதவி உயர்வுக்கான அதிகாரிகளின் தகுதியை தீர்மானிக்க வேண்டும். இதனால் தகுதியற்றவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

மத்திய அரசின் கீழ் சுமார் 90 அமைச்சகங்கள் அல்லது துறைகள் உள்ளன. இவற்றின் கீழ் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

3,800 பதவிகள்

ரயில்வேயில் 13 லட்சம், உள்துறையில் 10 லட்சம், பாதுகாப்புத் துறையில் 3.5 லட்சம், தபால் அலுவலகங்களில் 1.68 லட்சம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர். 44 அமைச்சகங்கள் அல்லது துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி அவற்றின் கீழ் சுமார் 3,800 பதவிகள் (கேடர்கள்) உள்ளன. ஒவ்வொரு கேடர் கட்டுப்பாட்டு அதிகாரியும் அந்தந்த கேடருக்கான இடஒதுக்கீடு பட்டியலை பராமரிப்பது அவசியம் ஆகும்.

இவ்வாறு மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x