

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள பைரதேவரகொப்பாவில் பெந்தகோஸ்தே தேவாலயம் உள்ளது.
இந்த தேவாலயத்தில் கடந்த 17-ம் தேதி பாதிரியார் சோமு அவராதி, நூற்றுக்கும் மேற் பட்டவர்களுடன் இணைந்து பிரார்த்தனை மேற்கொண்டார். அப்போது பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த மஞ்சுநாத் பூஜாரி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் தேவாலயத்தில் நுழைந்து, பாதிரியார் கட்டாய மதமாற்றம் செய்வதாக முழக்கம் எழுப்பினர்.
இதற்கு பாதிரியார் மறுப்பு தெரிவித்த நிலையில் பஜ்ரங் தள் அமைப்பினர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நவநகர் காவல் நிலையத்தில் பாதிரியார் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் பஜ்ரங் தள் அமைப்பினரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஹூப்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்துக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் வேலையில் பாதிரியார் சோமு அவராதி ஈடுபட்டுள்ளார் என பஜ்ரங் தள் அமைப்பினர் புகார் அளித்தனர்.
மேலும் 19-ம் தேதி பாதிரியார் சோமு அவராதியை கைது செய்ய கோரி இந்துத்துவா கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் பாதிரியார் சோமு அவராதியை மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.