Last Updated : 27 Mar, 2016 12:11 PM

 

Published : 27 Mar 2016 12:11 PM
Last Updated : 27 Mar 2016 12:11 PM

டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த புதன்கிழமை போராட்டம் தொடங்கினர்.

நதிகள் இணைப்பு, காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு, விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தின் முதல் நாளன்று உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள், மேல் சட்டை அணியாமல் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு கோரிக்கைகளை முழங்கினர். இந்நிலையில் நேற்று பஹார்கன்ச் பகுதியில் உள்ள புதுடெல்லி ரயில்நிலையம் முன்பு விவசாயிகள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு ‘தி இந்து’விடம் கூறும்போது, கடந்த 2 நாட்களாக எங்களை ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த விடாமல் டெல்லி போலீஸார் அனுமதி மறுக்கின்றனர். தமிழகத்துக்கு திரும்பிச் செல்லும்படி தங்கும் இடத்திலும் வந்து வற்புறுத்துகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைப்பதாகவும் கூறி கடந்த 2 நாட்களாக அவரது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் அலைக்கழிக்க வைத்தனர்.

ஆனால் எங்கள் மனுவை மட்டும் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் பிரதமரை சந்திக்க அனுமதிக்கவில்லை. எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் ஓயாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x