

பெட்ரோல் விலை உயர்வினால் பெரும்பாலான மக்களுக்கு எந்தவிதப் பாதிப்புமில்லை என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தெரிவித்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வியாழக்கிழமை நாடு முழுவதும் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை தொடர்ந்து ஒரு லிட்டருக்கு 45 பைசா வரை இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாவது நாளாக மீண்டும் உயர்த்தப்பட்டது.
அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின் படி, டெல்லியில் பெட்ரோலின் பம்ப் விலை லிட்டருக்கு 35 பைசா உயர்ந்து ரூ.106.54 ஆக உயர்ந்தது, டீசல் விலை இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டர் ஒன்றுக்கு 45 பைசாவிலிருந்து 95.27 பைசாவாக அதிரித்தது.
எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான உயர்வை சந்தித்து வருவதற்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் உ.பி.யை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இப்பிரச்சினையில் மத்திய அரசை பாதுகாக்கும் விதமாக இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்று பேசியுள்ளார்.
உத்தரபிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி இதுகுறித்து ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது:
''நாட்டின் எரிபொருள் விலைகளுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே 4 சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குத்தான் பெட்ரோல் தேவை. மற்றபடி 95 சதவிகித மக்களுக்கு பெட்ரோல் அத்தியாவசியத் தேவையில்லை''
இவ்வாறு உபேந்திர திவாரி தெரிவித்தார்.
முன்னதாக புதன்கிழமை, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எரிபொருள் விலை உயர்வுக்கு பதிலளித்துப் பேசும்போது, "பெட்ரோலிய விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது, இந்தியாவுக்கு மட்டுமல்ல, இது ஒரு சர்வதேச பிரச்சினை'' என்று தெரிவித்தார்.