

பெங்களூருவில் தனியார் விடுதியில் முகாமிட்டு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறியதாவது:
கடந்த 15 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை கணிக்குமாறு ஆன்லைன் பந்தய போட்டிகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
இதில் பெங்களூருவில் 5 தனியார் விடுதிகளில் முகாமிட்டிருந்த 27 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 27 பேரையும் பிடித்து விசாரித்த தனிப்படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 78 லட்சம் ரொக்கப் பணம், 18 மடிக் கணிணிகள், இதர மின்னணு சாதனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
கைதான 27 பேரில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும், 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் மீது சூதாட்ட தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
தனிப்படை அதிகாரிகள் அவர்களை காவலில் எடுத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.