புதிய கல்விக் கொள்கை: ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Updated on
2 min read

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருவது குறித்து ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அடுத்தாற்போல் 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும் பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்தது. இதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அமைச்சரவை உத்தரவிட்டது.

மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையைப் படிப்படியாக அமல்படுத்தி வரும் நிலையில் ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்று, நேற்றுடன் (புதன்கிழமை) முடிவு பெற்றுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவினான ஏபிவிபி சார்பில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் சார்பில் அதன் இணை பொதுச் செயலாளர்கள் கிருஷ்ண கோபால் மற்றும் அருண் குமார், கொள்ளை பரப்பு பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர் மற்றும் பிறர் கலந்துகொண்டனர்.

ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளான ஏபிவிபி, வித்யா பாரதி, பாரதிய சிக்‌ஷா சான்ஸ்கிரிதி உதான் நியாஸ் மற்றும் பாரதிய சிக்‌ஷா மண்டல் உள்ளிட்ட அமைப்புகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டன.

பாஜக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வி.சதிஷ், பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் இணை பொதுச் செயலாளர் ஷிவ்பிரகாஷ் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்களின் கோணத்தில் புதிய கல்விக் கொள்கை, திறன் மேம்பாடு, யூபிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் விரிவாக அலசப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் ஆதரவு கல்வியாளர்களும் இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்துள்ளனர்.

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கேபினட் அமைச்சர்களான ராஜீவ் சந்திரசேகர் மற்றும் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in