Published : 21 Oct 2021 03:33 PM
Last Updated : 21 Oct 2021 03:33 PM

தீபாவளி ஜாக்பாட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

விரைவில் தீபாவளி வரவுள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

கரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

இதன் பிறகு தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன் மூலம்
ஏற்கெனவே 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இது 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 3 % அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உயர்வு கடந்த ஜூலை 1 -ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் பெறுவார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 9,488.70 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x