Last Updated : 21 Oct, 2021 01:29 PM

 

Published : 21 Oct 2021 01:29 PM
Last Updated : 21 Oct 2021 01:29 PM

100 கோடி போர் வீரர்கள்; 10 மாதங்களில் சாத்தியமான மைல்கல்: கரோனா தடுப்பூசிகளின் பயணம் ஓர் பார்வை

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி

2021, ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்ட கரோனாவுக்கு எதிரான வலுவான தடுப்பூசிப் போர், அடுத்த 10 மாதங்களில் நாட்டில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

தொடக்கத்தில் ஆமை வேகத்தில் சென்ற தடுப்பூசியின் பயணம், பின்னர் மத்தியஅரசு,மாநிலஅரசுகளின் தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரத்தால் கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.

இதன் விளைவாக ஜனவரி 16ம் தேதி தொடங்கிய இந்த பயணம், அக்டோபர் 21-ம் தேதிக்குள் 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை மைல்கல்லை எட்டியது.

உலக நாடுகளை அச்சுறுத்திய கரோனாவுக்கு வல்லரசு நாடுகள் தடுப்பூசி தயாரிக்க வேகம் காட்டிய நேரத்தில் இந்தியாவில் எப்போது தயாரிக்கப்படும், வல்லரசு நாடுகளைத்தான் சார்ந்திருக்க வேண்டுமா, கரோனாவுக்கு எதிராக கொத்துக் கொத்தாக மடியத்தான் வேண்டுமா என்று கேள்வியும் அச்சமும் மக்கள் மனதில் எழுந்தது.

ஆனால், மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்திவரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உள்நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்க முடியும், மக்களை பேரழிவு கரோனாவிலிருந்து காக்க முடியும் என்று நம்பிக்கையூட்டி முயற்சியில் இறங்கியது.

ஹைதராபாத்தை் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஐசிஎம்ஆர், தேசிய வைராலாஜி நிறுவனம் இணைந்து கரோனா தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்தியது. இந்த முயற்சியின் விளைவாக கோவாக்ஸின் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, வெற்றிகரமான பரிசோதனைகளை நிறைவு செய்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் ஜனவரி 3ம் தேதி சான்று வழங்கப்பட்டது.

மறுபுறம் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன்இணைந்து சீரம் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பில் இறங்கி கோவிஷீல்ட் மருந்து இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.இந்த இரு நிறுவனங்களை மத்தியஅரசு அரவணைத்து சென்றதன் விளைவாக தடுப்பூசி தயாராகி கடந்த ஜனவரி 16ம் தேதி முதன்முதலில் கரோனா தடுப்பூசிப் பயணம் தொடங்கியது.

ஜனவரி 16ம் தேதி இந்தியா கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிப் பயணத்தை தொடங்கியபோது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகள் மக்களுக்கு புழக்கத்துக்கு வந்தன. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், 60-வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்பட்டன. அதன்பின் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தி படிப்படியாக நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகச் செலுத்த மத்தியஅரசு முடிவு செய்தது.

அடுத்தபடியாக அவசரகாலத்துக்குப் பயன்படும் வகையில் ரஷ்யாவின் காமாலயாஆய்வு நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.

இந்தியாவில் தடுப்பூசிக்கான மிகப்பெரியசந்தை இருப்பதையும், தேவை இருப்பதையும் உணர்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரின. மக்களுக்கு பல்வேறு வகையான திறன்மிக்க தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 3 வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகாலப் பயன்பாட்டுக்குஅனுமதி வழங்கியது.

அமெரிக்காவின் மார்டர்னா, ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன், ஜைடஸ் கெடிலா ஆகிய தடுப்பூசிகளை அவசர காலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்து. இந்த நிறுவனங்கள் நவம்பர் மாதத்திலிருந்து உற்பத்தியை தொடங்க உள்ளன.

கோவாக்சின்

கோவாக்சினைப் பொறுத்தவரை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி கரோனாவுக்கு எதிராக 77.8 சதவீதம் சிறப்பாகச் செயல்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. தீவிரமான அறிகுறி உள்ளவர்களுக்கு எதிராக 93.4 சதவீதப் பாதுகாப்பும், அறிகுறி இல்லாதவர்களுக்கு 63.6சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மத்திய மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர்கள் குழு கடந்த 12ம் தேதி அளித்த பரிந்துரையில், கோவாக்சின் தடுப்பூசியை 2 வயது முதல் 18வயதுள்ளவர்களுக்கு செலுத்தலாம் என்று பரிந்துரைத்தது.

இந்தபரிந்துரை தற்போது மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

கோவிஷீல்ட்

ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜென்காவி்ன் கோவிஷீல்ட் தடுப்பூசி சீரம் நிறுவனத்தால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. சிம்பன்சி குரங்கின் அடினோவைரஸ்களிடம் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பும் அங்கீகரித்துள்ளது. ஆனால், கோவாக்சினுக்கான அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை, விரைவால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் மற்ற நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கோவிஷீல்ட், கோவாக்சின் புழக்கத்துக்குவந்தபின் ஏராளமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், இந்திய மக்களின் தேவை கருதி ஏற்றுமதி சிறிது காலத்துக்கு நிறுத்தப்பட்டு மீண்டும் ஏற்றுமதி நடைபெற உள்ளது.

ஸ்புட்னிக்-வி
மூன்றாவதாக ரஷ்யாவின் காமாலயா ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு கடந்த ஏப்ரல் 13ம்தேதி மத்திய மருந்துக்க ட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது.

மருத்துவ இதழான லான்செட் அறிக்கையின்படி, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கரோனாவுக்கு எதிராக 91.6 சதவீதம் சிறப்பாக செயல்படுகிறது,பாதுகாப்பு அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. இந்த ஸ்புட்னிக்-விதடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்ரீஸ் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தியாவிலேயே தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

மார்டர்னா

கடந்த ஜூன் 29-ம் தேதி அமெரிக்காவின் மார்டர்னா கரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. எம்ஆர்என்ஏ-1273 ரகத்தைச் சேர்ந்த இந்த தடுப்பூசி இந்தியாவில் புழக்கத்துக்கு வரும் 4-வது தடுப்பூசியாகும்.

சிங்கில் டோஸ் தடுப்பூசி

ஆகஸ்ட் 7-ம்தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் சிங்கில்டோஸ் தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதியளித்தது. ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் தயாரித்த இந்தத் தடுப்பூசி ஒருமுறை மட்டுமே செலுத்திக் கொள்ளும் தடுப்பூசியாகும்.

ஊசியில்லா தடுப்பூசி

இந்தியாவில் அடுத்ததாக ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் சார்பில் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ம்தேதி மத்திய அரசு அனுமதியளித்தைத் தொடர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெயரை ஜைகோவ்-டி பெற்றது.

அதுமட்டுமல்லமல் உலகிலேயே பிளாஸ்மாடி அதாவது டிஎன்ஏ தடுப்பூசிஎன்ற பெருமையும் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு உண்டு. இதற்கு முன் இருந்த தடுப்பூசிகள் 2 டோஸ் கொண்டவை, ஆனால், இந்த தடுப்பூசி 3 டோஸ் கொண்டவை. முதல்நாள்,28வது நாள், 56-வது நாளில் ஜைகோவ்-டி தடுப்பூசியைச் செலுத்தவேண்டும். இதில் கவனிக்க வேண்டிய அம்சமாக ஊசியில்லாமல், ஃபார்மா ஜெட் மூலம் உடலில் தடுப்பூசியை செலுத்தும் தன்மை கொண்டதாகும். இதனால் ஊசி செலுத்தியபின் வலி ஏற்படாது. இதுதவிர பயோலாஜிக்கல்-இ நிறுவனம் தயாித்த கார்பிவேக்ஸ் தடுப்பூசிக்கும் அனுமதிதரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு கோவிஷீல்ட், கோவாக்சின், ஜைகோவ்டி, பயோலாஜிக்கல் இ ஆகிய 4 தடுப்பூசிகள் அடுத்தடுத்து வர உள்ளன.

உலக நாடுகளை தடுப்பூசிக்கு எதிர்பார்த்த காலம் கடந்து, எங்களாலும் முடியும் என்று இந்தியா சாதித்துள்ளது. 100 கோடி தடுப்பூசியை எப்போது செலுத்தப்போகிறோம் என்ற கேள்வியையும் உடைத்து, அந்த மைல்கல்லையும் இந்தியா அடைந்துள்ளது. இன்று கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் 100 கோடி போர் வீரர்கள் உருவாகியுள்ளார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x