Last Updated : 21 Oct, 2021 11:44 AM

 

Published : 21 Oct 2021 11:44 AM
Last Updated : 21 Oct 2021 11:44 AM

ஆக்ராவில் ரூ.25 லட்சம் திருட்டு வழக்கின் குற்றவாளி விசாரணையில் மரணம்: உ.பி. அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு: குடும்பத்தாரை சந்தித்து நேரில் பிரியங்கா காந்தி ஆறுதல்

புதுடெல்லி

உத்தரப்பிரதேசம் ஆக்ராவின் காவல்நிலையத்தில் ரூ.25 லட்சம் திருட்டு வழக்கின் குற்றவாளி விசாரணையில் மரணம் அடைந்துள்ளார். இவரது குடும்பத்தாருக்கு அம்மாநில அரசால் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவின் ஒரு திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட ரூ.25 லட்சம் மற்றும் தங்கநகைகள் அதன் ஜெக்தீஷ்புரா காவல்நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இதில் ரூ.25 லட்சம் மட்டும் கடந்த ஞாயிறு இரவில் திருடப்பட்டிருந்தது.

இதன் மீது வழக்கு பதிவு செய்த ஆக்ரா போலீஸார், அதன் பொறுப்பில் இருந்த காவல்நிலைய ஆய்வாளர் அனுப் குமார் திவாரியுடன் 6 காவலர்களும் பணியிடைநீக்கம் செய்தனர்.

மறுநாள் சிசிடிவி பதிவின் பேரில் அங்கு துப்புரவுப் பணிக்கு வந்த அருண் வால்மீகி எனும் தாஜ்கஞ் பகுதிவாசியை அழைத்து வந்து விசாரித்தனர். இவர் அக்காவல்நிலையத்தின் தற்காலிகத் துப்புரவு பணியாளர்.

திருடப்பட்ட தொகையில் ரூ.15 லட்சம் தன் வீட்டில் வைத்திருப்பதாக அருண் கூறியதன் பேரில் அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து தொகை மீட்கப்பட்ட பின் அருணின் உடல்நலம் திடீர் எனக் குன்றியது.

இதனால், அவரது குடும்பத்தாருடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அருண் பலியானார். இவரது குடும்பத்தார் புகாரின் பேரில் ஜெக்தீஷ்புரா காவல்நிலையத்தார் மீது ஐபிசி 302 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.’

இதுகுறித்து அருணின் தாயான கமலா தேவி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘இவ்வழக்கின் விசாரணைக்காக இரவில் வந்த போலீஸார் எங்கள் குடும்பத்திரையும் இழுத்துச் சென்றனர்.

இந்த திருட்டில் சில போலீஸாரின் பெயர்களை கூறி இருந்தார். இதை என் மகன் வெளியில் சொல்லி விடக் கூடாது என்பதால் கொன்று விட்டனர்.

எனது மகனின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு ரூ.1 கோடி இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.’ எனப் புகார் கூறுகிறார்.

அருணின் உடல் ஆக்ராவின் அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவரது உறவினர்களுடன் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட உபியின் அரசியல் கட்சியினர் அதிக அளவில் கூடி விட்டனர்.

இதற்கு அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதும், பலியான அருண் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் காரணமானது.

இதனால், அருண் பலியான வழக்கு அரசியல் உருவெடுக்கத் துவங்கியது. அங்கு வந்த ஆக்ரா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராகவேந்திராசிங் மீனு, கூடியிருந்த பாஜகவினர் உள்ளிட்டோரால் கிளம்பிய எதிர்ப்பால் தாக்குதலுக்கு அஞ்சி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா, பலியானவரின் குடும்பத்தினரை சந்திக்க லக்னோவிலிருந்து கிளம்பினார்.

இவருக்கு அனுமதி மறுத்த உ.பி. போலீஸார், பிரியங்காவை ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டனர். அவரை மாலை வரை அரசு விடுதியில் தங்க வைத்த பின் ஆக்ரா செல்ல அனுமதித்தனர்.

இதையடுத்து, நேற்று இரவு 11.00 மணிக்கு அருண் விட்டிற்கு சென்ற பிரியங்கா, அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு முன்பாக ஏராளமான காங்கிரஸாரும் அருண் வீட்டின் முன் கூடி விட்டனர்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடன் பேசிய பிரியங்கா கூறும்போது, ‘‘எனது அலுவலகம் தவிர எங்கு சென்றாலும் உபி போலீஸார் என்னை அனுமதிப்பதில்லை. மிகவும் போராடி இங்கு வரவேண்டியதாயிற்று.

அருணுடன் சேர்த்து அங்கு வாழும் 17 வால்மீகி சமூகத்தினரை போலீஸார் பிடித்துச் சென்று சித்ரவதை செய்துள்ளனர். மின்சாரத்தில் ஷாக் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு வகை கொடுமைகளை அருண் மீது போலீஸார் செய்துள்ளனர்.

உ.பி.யில் பெண்கள் மற்றும் விவசாயிகள் என்றால் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இது ஒரு அரசின் என்ன மாதிரியானப் போக்கு எனப் புரியவில்லை.’’ எனப் புகார் கூறியுள்ளார்.

பலியான அருணின் குடும்பம் ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து ஆக்ராவுக்கு பிழைக்க வந்தது. எனவே, அங்கு ஆளும் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெல்லோட்டிடமும் பேசி உதவ இருப்பதாகப் பிரியங்கா உறுதி அளித்துள்ளார்.

உ.பி.யின் முன்னாள் முதல்வரான சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ், பாஜக அரசை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரும் இன்று அருண் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறத் திட்டமிட்டுள்ளார்.

உ.பி. அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு

இதனிடையே, உ.பி. அரசு சார்பில் அருணின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை மற்றும் ஒருவருக்கு அரசுப்பணியும் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆக்ரா மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று மதியம் வெளியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x