

மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 20 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாமீன் கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். அப்போது, ஆர்யன் கான் அடிக்கடி போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்ததாகவும், சர்வதேசப் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் என்சிபி சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான உத் தரவை 20-ம் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைத்தார். அதன்படி, இந்தவழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்சிபி வாதத்தை ஏற்று ஆர்யன் கான்உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மேல்முறையீடு செய்துள்ளார்.