

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், போவா தொகுதி எம்எல்ஏவான ஜோகிந்தர் பால், நேற்று தனது சொந்த தொகுதியில் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், ஜோகிந்தர் பாலை நோக்கி தொடர்ந்து கோபமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் இளைஞரை அருகில் அழைத்த எம்எல்ஏ ஜோகிந்தர், அவரது கையில் ஒலிப் பெருக்கியை (மைக்) கொடுத்து பேசுமாறு கூறினார். மைக்கை வாங்கிய அந்த இளைஞரும், இந்த தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளாக என்ன நன்மை செய்தீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, அந்த இளைஞரை கன்னத்திலும், தலையிலும் சரமாரியாக அடித்தார். அப்போது அங்கிருந்த சில போலீஸாரும், எம்எல்ஏ ஆதரவாளர்களும் கூடசேர்ந்து அந்த இளைஞரை தாக்கினர். பின்னர், வேறு சில போலீஸார் அங்கு உடனடியாக வந்து அந்த இளைஞரை அவர்களிடம் இருந்து மீட்டு வெளியேற்றினர்.
இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எம்எல்ஏ செய்கைக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.பொதுமக்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பஞ்சாப் காங்கிரஸுக்குள் நடக்கும் உட்கட்சி பூசல் ஒருபுறம் பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருக்க, தற்போது இளைஞரை எம்எல்ஏ தாக்கிய சம்பவம் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.