

காஷ்மீரின் ஷோபியான் மாவட் டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஷோபியான் மாவட்டம், டிராகட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதி கள் சுட்டதால், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த இருதரப்பு மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் லஷ்கர் அமைப்பின் நிழல் அமைப்பான டிஆர்எப் (தி ரெசிஸ்டன்ட் ஃபிரன்ட்) அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் டிஆர்எப் அமைப்பின் ஷோபியான் மாவட்ட கமாண்டர் அடில் வானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். தெற்கு காஷ்மீரில் உ.பி. தச்சுத் தொழிலாளி சகீர் அகமது அன்சாரி கொல்லப்பட்டதில் அடில் வானிக்கு தொடர்புள்ளது. அடில் வானி கடந்த ஆண்டு ஜூலை முதல் தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்” என்றனர்.
காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள், பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.-பிடிஐ