

ஒவ்வொரு முறையும் சேஷாசல செம்மரக்கடத்தலில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மரம் வெட்டும் நபர்கள்தான் கைது செய்யப்படுகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட தமிழக தொழிலாளர்கள் கைது, சுட்டுக் கொலை உள்ளிட்ட செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கின்றது. ஒரு நாளாவது அவர்களைப் பற்றி யோசித்திருக்கிறோமா?
தினமும் பல்வேறு வாகனங்களில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரங்கள், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் பிடிபடும் தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பதிலைத்தான் சொல்கின்றனர். "சாலை அமைக்கவும், வனங்களை சுத்தப்படுத்தவும் ஆட்கள் வேண்டும் என்றுதான் அழைத்து வந்தனர். எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்ற பதில்தான் பெரும்பாலும்.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொழிலாளர்களிடம் இருந்து வேறு மாதிரியான பதில்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.
பல காலங்களாக கூறப்பட்ட கதைகள் கூறுவது நிறுத்தப்பட்டு உண்மைகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, செம்மரக் கடத்தல் எதிர்ப்பு செயலணி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரம் வெட்டுபவர்கள் இருவரைக் கைது செய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவருமே 40 வயதானவர்கள்.
செல்லப்பா மற்றும் குமார் ஆகிய இருவரையும் சேஷாசல மலைக்கு அருகில், சந்திரகிரி ரயில் நிலையத்துக்கு அருகில் கைது செய்திருக்கின்றனர். கூட்டத்தில் இருந்த மற்ற 8 பேரும் தப்பியோடி விட்டனர்.
கைதானவர்களும், தப்பியோடியவர்களும், அன்று கையில் கோடரி, அகலக்கத்தி மற்றும் மரம் வெட்டத் தேவையான பொருட்களுடன், சேஷாசலம் மலையை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். காட்பாடி- திருப்பதி பாசஞ்சர் ரயிலில், சந்திரகிரி ரயில் நிலையத்தில் இறங்கி, அரிசி மற்றும் மற்ற மளிகை சாமான்களுடன் சேஷாசலத்துக்கு நடந்து போய்க் கொண்டிருந்த போது பிடிபட்டனர்.
பிடிபட்ட இரு தமிழர்களான செல்லப்பா மற்றும் குமார் ஆகிய இருவரும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டது குறித்து, தி இந்துவிடம் (ஆங்கிலம்) அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருக்கின்றனர்.
முதலில் பேசிய செல்லப்பா, "எனக்கு இரண்டு மகள்கள். பெரியவள், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். என் மகள் ஆங்கிலத்தில் நன்றாகப் படிக்க வேண்டும்; பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவளின் பள்ளி நிர்வாகத்தில் இருந்து 30,000 ரூபாயைக் கட்டச் சொல்லிக் கேட்டார்கள். அவளை தனியார் பள்ளிக்கு அனுப்பி பெரிய தவறைச் செய்துவிட்டேன். இப்போது பணத்துக்கு நான் எங்கே செல்வது?
சேஷாசலத்துக்கு இரண்டு முறை வந்தால், எனக்குத் தேவையான பணம் கிடைக்கும் என்றார்கள். பெரியவள் அங்கே படிப்பதால், சின்னவளையும் தனியார் பள்ளியில் சேர்க்கவேண்டும். என்னுடைய பெண்கள் அரசுப் பள்ளிகளில் படித்தால், முக்கியமாக கிராமப்புறங்களில் இருந்து படித்தால், விரைவில் மழுங்கிப் போய் விடுவார்கள்" என்றார்.
குழந்தைகளின் ஆசை
அதே மாவட்டத்தில் கொட்டாவூரில் வசிக்கும் மரம் வெட்டுபவரான குமார், "என் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் படிப்பதில் ஆர்வம் இல்லை. மற்ற பணக்காரக் குழந்தைகளைப் போல, தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆங்கிலம் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் இந்த நியாயமான ஆசைகளைக் கூட நிறைவேற்றாவிட்டால், நான் அப்பா என்ற ஸ்தானத்துக்கே லாயக்கற்றவனாக ஆகிவிடுவேன். என்னால் என் மனைவியின் முகத்தில் விழிக்க முடியாது. இப்போது பள்ளிகளுக்கான அட்மிஷன் நேரம், அதனால்தான் சென்றேன்" என்றார்.
பொதுவாக, காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளும் மரம் வெட்டும் நபர்கள், பொய்யான பெயர், முகவரிகளையே கூறுவார்கள். ஆனால் இந்த முறை, இவர்கள் இருவரும் தங்களின் குடும்பத்தைப் பற்றிக் கூறியதோடு உண்மையாக தகவல்களைக் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.