

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைமருந்துக்கு அடிமையானவர், போதை மருந்துகளை விற்பனை செய்பவர் என்று கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் நலின் குமார் காட்டீல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள மேல்சபைத் தேர்தலுக்கு தயாராவது குறித்த பாஜக கூட்டம் நேற்று ஹூப்பள்ளி நகரில் நடந்தது. இதில் மாநில தலைவர் நலின் குமார் காட்டீல் பேசுகையில் “ மிகவும் தரம்தாழ்ந்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது.
பிரதமர் மோடிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். பிரதமர் மோடியை நம் தேசத்து மக்கள் மட்டும்விரும்பவில்லை அமெரிக்க அதிபரே பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜி-23 தலைவர்கள் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் இல்லை என்று கூறுகிறார்கள் . ஆனால் சோனியா காந்தியோ காங்கிரஸ் தலைவர் நான்தான் என்று அறிக்கை விடுகிறார். மற்றொருபுறம் விரைவில் காங்கிரஸ் தலைவராகுவேன் என ராகுல் காந்தி பேசுகிறார். சொல்லுங்கள், ராகுல் காந்தி என்றால் என்ன.
ராகுல் காந்தி போதை மருந்துக்கு அடிமையானவர், போதை மருந்துகளை விற்பனை செய்பவர். இதை நான் சொல்லவில்லை, பல்வேறு செய்திகளில் வந்துள்ளன. காங்கிரஸ் கட்சியை அவர்களால் நடத்தமுடியவி்ல்லை. கட்சியை நடத்த முடியாதவர்களால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும்” எனத் தெரிவி்த்தார்.
கர்நாடக மாநில பாஜக தலைவர் நலின் குமார் காட்டீல் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து,அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் “ இதுபோன்ற அவமதிப்புக்குரிய கருத்துக்களைப் பேசுவதற்குப் பதிலாக, குஜராத்தில் அதானி துறைமுகத்தில் கைக்கப்பற்றப்பட்ட ரூ.2 லட்சம் கோடி போதை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதன் உண்மையை பாஜக கூற வேண்டும். காட்டீல் அந்த போதை மருந்தை பயன்படுத்தியிருப்பார் அதனால்தான் போதையில் இதுபோன்று உளறுகிறார்.
ராகுல்காந்திக்கு எதிராக இதுபோன்று அவதூறான கருத்துக்களைப் பேசுவது என்பது பாஜக தலைவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது. கர்நாடக பாஜக தலைவர் பேசிய நாகரீகமற்ற கருத்துகள் ஏற்கமுடியாதவை. நலின் குமார் தனது வார்த்தைகளுக்கு நிச்சயமாக மன்னிப்புக் கோர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறுகையில் “ பாஜக தலைவர் நலின் குமார் முதர்ச்சியற்றவர், நாகரீகமற்ற அரசியல்வாதி. அவருக்கு மத்திய அரசின் மனநலக் காப்பகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.