

மக்களவையின் இடைக்காலத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் நியமிக்கப்பட்டார். இது தொடர்பான அறிவிக்கையை மக்களவைச் செயலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், மக்களவைத் தலைவரின் பணிகளை மேற்கொள்ள கமல்நாத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் மிகவும் மூத்த உறுப்பினர் கமல்நாத். அந்த வகையில் அவரை இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டுமென்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
புதிய மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் கமல்நாத் அப்பொறுப்பில் இருப்பார்.
கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9-வது முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.