Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM

நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை: நிலைமையை ஆய்வு செய்ய 23-ம் தேதி அமித் ஷா காஷ்மீர் செல்கிறார்

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்கின்றனர். இதனால், கலக்கமடைந்துள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறுவதற்காக ஜம்மு ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். படம்: பிடிஐ

புதுடெல்லி

நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலைமைகளை நேரில் ஆய்வு செய்வதற்காக வரும் 23-ம் தேதி அமித் ஷா காஷ்மீர் செல்கிறார்.

காஷ்மீரில் சமீபகாலமாக அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று வருகின்றனர். அதிலும் காஷ்மீர் பண்டிட்கள், இந்துக்கள், சீக்கியர்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை தீவிரவாதிகள் குறிவைத்து கொல்கின்றனர். கடந்த 16 நாட்களில் அப்பாவி பொதுமக்கள் 11 பேரை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இதனால் மக்களிடம் பீதி நிலவுகிறது.

இதையடுத்து, வெளிமாநிலங் களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு பிஹா ரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொல் லப்பட்டனர். அதன்பின், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, காஷ்மீரில் உள்ள பிஹார் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசும், காஷ்மீர் நிர்வாகமும் முடுக்கிவிட்டுள்ளன. தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் 12-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, டெல்லியில் நேற்று முன்தினம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி னார். நாட்டின் பாது காப்பு நிலவரம், காஷ் மீர் நிலைமை ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம், டெல்லி எல்லை பகுதிகள் மற்றும் உத்தரபிர தேசத்தில் விவசாயிகளின் போராட்டம், காஷ்மீர் நிலவரம் ஆகியவை குறித்து அவர்கள் விரிவாக ஆலோசித்தனர். காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றியும் தீவிரவாதிகளை ஒடுக்க மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மோடியிடம் அமித் ஷா விளக்கினார். மேலும், உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்தும் மோடியிடம் அமித் ஷா விவரித்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமரை சந்தித்துப் பேசிய நிலையில், நிலைமைகளை நேரில் ஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக வரும் 23-ம் தேதி காஷ்மீருக்கு செல்கிறார். அங்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, போலீஸ் உயர் அதிகாரிகள், மத்திய ஆயுதப் போலீஸ் படை அதிகாரிகள் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது பற்றியும் தீவிரவாதிகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பை அதிகரிப்பது தொடர் பாகவும் ஆலோசித்து உரிய உத்தரவுகளை அமித் ஷா பிறப்பிக்க உள்ளார். மேலும், காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளையும் அமித் ஷா வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனி யன் பிரதேசங்களாக பிரிக் கப்பட்டது. அதன் பிறகு காஷ்மீருக்கு அமித் ஷா செல்வது இதுவே முதல்முறையாகும். தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித் துள்ள நிலையில், அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

என்ஐஏ விசாரணை

காஷ்மீரில் சமீபத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பான 4 வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)முடிவு செய்துள் ளது. குல்காம் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்த பிஹாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கடந்த 17-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை மற்றும் நிலங்கள் வாங்கு வதற்கு அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களை, குறிப்பாக வெளிமாநிலங் களைச் சேர்ந்தவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிஹார் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பான 4 வழக்குகளை என்ஐஏ விசாரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, பாதுகாப்பு கருதி வெளிமாநி லத்தவர்கள் அனைவரையும் அருகில் உள்ள பாதுகாப்புப் படை முகாம்களில் தங்க வைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x