

கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியஎல்லைப்பகுதியிலும் சீனப்படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன என்று இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தார்.
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம், சீன வீரர்கள் அத்து மீறி நுழைய முயன்றனர். இதை இந்திய வீரர்கள் தடுத்ததால் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்திய, சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை மீட்டெடுக்க இருதரப்பும் இதுவரை 13 கட்டபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன.
இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் ருபா பகுதியில், கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
இரு தரப்பினரும் அசல் கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஏசி) நெருக்கமாக உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அது சில சமயங்களில் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. அசல் கட்டுப்பாட்டு கோடு மற்றும்ஆழமான பகுதிகளில் நாங்கள்கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளோம்.
எந்த தற்செயல் நிகழ்வையும் சமாளிக்க ஒவ்வொரு பகுதியிலும் போதுமான சக்தி நம்மிடம் உள்ளது. எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் திறன் நம்மிடம் இருக்கிறது. ரோந்து செல்லும் முறையில் அதிக மாற்றம் செய்யவில்லை. சில பகுதிகளில் ஓரளவுக்கு ரோந்துப் பணியை அதிகரித்துள்ளோம்.
கிழக்கு லடாக் பகுதியைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் சீனப்படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இது கவலைஅளிக்கிறது. நமது ராணுவத்திடம் சிறந்த கண்காணிப்பு ரேடார்கள்,சிறந்த தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது முக்கிய அம்சமாக உள்ளது. அதை நோக்கி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது எல்ஏசி பகுதியில் இரவு நேரத்திலும் கண்காணிப்புப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆளில்லா கண்காணிப்பு விமானம் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ