Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM

கர்நாடக பாஜக- காங். ட்விட்டரில் மோதல்: வருத்தம் தெரிவித்தார் டி.கே.சிவகுமார்

பெங்களூரு: கடந்த ஒரு வாரமாக கர்நாடக அரசியலின் விவாத மேடையாக ட்விட்டர் சமூக வலைத்தளம் மாறியுள்ளது. மங்களூருவில் மத ரீதியான மோதல் அதிகரித்தது தொடர்பாக, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் சித்தராமையாவுக்கும் இடையே காங்கிரஸ், மஜதவை முன்வைத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில், ''காங்கிரஸ் பள்ளிகளைக் கட்டியது. ஆனால் பிரதமர் மோடி படிக்கச் செல்லவில்லை. முதியவர்கள் கல்வி கற்க காங்கிரஸ் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அப்போதும் மோடி படிக்க‌வில்லை" என பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தி போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவர் தன் கட்சியை திறம்பட நடத்த முடியாதவர்" 'என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ''பிரதமர் நரேந்திர மோடி குறித்த தரக்குறைவான பதிவுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பதிவை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டேன். ஆனால் பாஜக மாநில தலைவரே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து மிகவும் மோசமாக பதிவிட்டு இருப்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. கீழ்த்தரமான அரசியல் விமர்சனங்களை அவர்கள் தவிர்க்க வேண்டும். ராகுல் காந்தி பற்றிய பதிவுக்கு பாஜகவினர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x