

வட மற்றும் மத்திய இந்தியா மாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இது, ‘ஹோலிகா தெஹன்’ என அழைக்கப்படும் விறகு குவியலை நேற்று நள்ளிரவில் எரித்த பின் துவங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டின் பல மாநிலங்களில் கொண்டாடப்பட்ட ஹோலியில், பலவண்ண நிறங்களிலான தூளை வீசியும், நிறங்களை பீச்சி அடித்து இன்று மக்கள் கொண்டாடினார்கள். ஒருவொருக்கு ஒருவர் தங்களுக்குள் இனிப்புகளை பறிமாறி உண்டு மகிழ்ந்தார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வகைகளில் ஹோலியை கொண்டாடி மக்கள் மகிழ்ந்தார்கள்.
இந்த பண்டிகை குறிப்பாக உபியின் மத்துரா, பிருந்தாவனம் மற்றும் பர்ஸானா ஆகிய இடங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மத்துராவின் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் புகழ் பெற்றது என்பதால் அங்கு ஹோலி அதிக விமரிசையுடன் கொண்டாடப்படுகிறது. அருகிலுள்ள பிருந்தாவனில் கிருஷ்ணன் தன் லீலைகள் நடத்திய இடமாகக் கருதப்படுகிறது. இதனால், அங்கு ஹோலி சுமார் பத்து நாட்களுக்கு முன்பாகவே துவங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக இங்குள்ள பாங்கே பிஹாரி கிருஷ்ணன் கோயிலில் பலவர்ணத்திலான செயற்கை மழை கொட்டி கொண்டாடப்படும் ஹோலி அதிக புகழ் பெற்றது.
பர்ஸானாவில் தடி அடி ஹோலி மிகவும் பிரபலம் ஆகும். இங்கு பெண்கள் கூடி ஆண்கலின் தலையில் தடிகளால் அடித்து மகிழ்ந்து ஹோலி கொண்டாடுவார்கள். இந்த அடிகளை பெண்களிடம் வாங்க இளம் வயது ஆண்கள் அதிகம் முந்துவது உண்டு. இதன் முன்னதாக ஒரு பண்டிதர் பூஜைகள்செய்து அவர்கள் தலையில் சற்று கனமான துணிப்பைகளை வைத்து கட்டி விடுவார்கள். இதனால், அவர்கள் தலைகளில் காயம் படாமல் இருக்கும்.
இந்த மூன்று நகரங்களிலும் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையை காண பல வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருவது உண்டு. இந்த பண்டிகைக்காக தங்களுக்குள் வாழ்த்து சொல்ல அரசியல் தலைவர்கள் சந்திப்புகள் நடப்பது உண்டு. அப்போது அவர்களும் நிறங்களை பூசி ஹோலி கொண்டாடத் தவறுவதில்லை. இதற்காக டெல்லியில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் தம் அலுவலகங்களுக்கு வந்திருந்தனர்.
ஹோலிகாவின் புராண வரலாறு
ஹோலிகாவின் புராண வரலாற்றுப்படி, விஷ்ணு பக்தனான சிறுவன் பிரகலாதனைக் கொல்ல பல வழிகளை கடைப்பிடிக்கிறார் அவரது தந்தை இரண்யன். இதன் ஒரு கட்டமாக பிரகலாதனை தீயிலிட்டுக் கொளுத்த உத்தரவிடுகிறார். அப்போது தீம்பிழம்புகளில் இருந்து தப்பி ஓடி விடாமல் இருக்க, இரண்யனின் சகோதரியும் அரக்கியுமான ஹோலிகா, பிரகலாதனை தன் மடியில் ஏந்தி அமர்ந்து கொள்கிறார். காரணம், தன்னை தீ ஒன்றும் செய்யக் கூடாது என்ற வரம் பெற்றவராம் ஹோலிகா. ஆனால், ஹோலிகா கருகி சாம்பலாகி விட அந்த தீ, பிரகலாதனை ஒன்றுமே செய்யவில்லை. இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஹோலி பண்டிகையின் ‘ஹோலிகா தெஹன்‘ எனும் பெயரிலும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது.
கொண்டாடப்படும் விதம்
இதற்காக, ஹோலி பண்டிகைக்கு பத்து நாட்கள் முன்பாக நகரம் முதல் சிறிய கிராமம் வரை உள்ள முக்கியமான முற்சந்தி மற்றும் நாற்சந்திகளில் மரம் செடி கொடிகளை வெட்டி குவிக்கிறார்கள். பிறகு இதற்கு நாள்தோறும் அந்தப்
பகுதியிலுள்ள பெண்கள் வந்து பூஜை செய்து வணங்கியும் செல்கிறார்கள். கடைசியாக ஹோலிப் பண்டிகையின் விடியலில் ஒரு குறிப்பிட்ட நேரம் குறித்து பூஜை செய்த பின் அதை எரித்து விடுவார்கள். அது தீ ஜுவாலைகளுடன் கொளுந்து விட்டு எரியும் போது மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிப்பதுடன், அதில் ஒரு விறகை தம் வீட்டிற்கு எடுத்து சென்று புதிதாக அடுப்பை மூட்டுவார்கள்.
குளிர்காலம் முடிந்து வசந்த காலத்தை துவங்கும் வகையில் இந்த ஹோலி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு பிரதமர் நரேந்தர மோடி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் துணை ஜனாதிபதி ஹாமீது அன்சாரி உட்படப் பலரும் பொதுமக்களுக்கு நேற்று வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர். வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை தீபாவளி போல் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இதனால், குறைந்தது இரண்டு நாள் அரசு விடுமுறையாக விடப்படுகிறது.