

இமாசலப்பிரதேசத்தில் பியாஸ் ஆற்று வெள்ளத்தில் ஹைதராபாத் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், 19 மாணவர்கள், சுற்றுலா கைடு ஆகிய 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 48 பேர், இமாசலப்பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை, மாண்டி மாவட்டத்தில் குல்லு பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றனர். அங்கு 6 மாணவிகள், 18 மாணவர்கள், சுற்றுலா கைடு ஆகிய 25 பேர் பியாஸ் ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அருகில் உள்ள லார்ஜி நீர்மின்திட்ட அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் திடீர் வெள்ளம் உருவானது. இதில் 25 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இவர்களைத் தேடும் பணி தொடங்கியது. இதில் 3 மாணவிகள், 2 மாணவர்கள் என 5 பேரின் உடல்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் திங்கள்கிழமை மீட்டனர். திங்கள்கிழமை மாலை நிறுத்தப்பட்ட மீட்புப் பணி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தொடங்கியது.
10 நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 84 பேர், விபத்து நடந்த தலவுத் என்ற இடத்தில் இருந்து பாந்தோ அணை வரை ஆற்றின் நெடுகிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
பாந்தோ அணையில் மிக அதிக அளவில் தண்ணீர் உள்ளது. தேடுதல் பணிக்கு வசதியாக, ஷட்டர்களை திறந்து தண்ணீரை வெளியேற்ற முயன்றால், அதில் உடல்களும் அடித்துச் செல்லப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவ பகுதியில் உள்ள தெலங்கானா உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்ம ரெட்டி கூறுகையில், “பாந்தோ அணையில் நீருக்கு அடியிலும் தேடுதல் பணி மேற்கொள்ள மாணவர்களின் பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு தேடுவது சிரமம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றார்.
“அணையில் தண்ணீர் திறக்கப்படும் முன் சைரன் ஒலிக்கப்படவில்லை. மாணவர்கள் ஆற்றில் இறங்கியபோது, அதில் நீர்வரத்து குறைவாக இருந்துள்ளது. இந்நிலையில் நீர்வரத்து திடீரென உயர்ந்து மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்றார்.
மாண்டி மாவட்ட ஆட்சியர் தேவேஷ் குமார் கூறுகையில், “லார்ஜி நீர்மின்திட்ட அணையில் தண்ணீர் திறப்பது தொடர்பாக உரிய விதிமுறைகள் உள்ளது. இதில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கருதுகிறேன். இப்பகுதியில் போதிய அளவில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவேண்டும் என்பதும் என் கருத்து” என்றார்.
நிவாரண உதவி
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 25 பேரின் குடும்பத்துக்கு இமாச்சலப்பிரதேச அரசு ரூ.1.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. முதல்வர் வீரபத்ர சிங் கூறுகையில், “மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பியாஸ் ஆற்றில் விபத்துக்கு வாய்ப்புள்ள இடங்களில் வேலி அமைக்கப்படும். அணைப் பகுதியில் சைரன் வசதிகள் வலுப்படுத்தப்படும். போதிய அளவில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படும்” என்றார்.
நீதிமன்றம் தலையீடு
இதனிடையே இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம், விபத்து தொடர்பாக செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இச்சம்பவம் குறித்து மாநில அரசு வரும் திங்கள்கிழமைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மக்களவையில் இரங்கல்
மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்துக்கு மக்களவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறுகையில், “இந்த செய்தி அறிந்து நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டு மக்களும் இந்த அவையும் இந்தத் துயரத்தில் பங்கேற்கிறோம்” என்றார்.-