

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த 3-ம் தேதி விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்திப் போராடினர்.
அப்போது விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “லக்கிம்பூர் கெரி கலவர விவகாரத்தில் உ.பி. அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை. பொறுப்பான அரசையும், போலீஸாரையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. சிலருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டாலும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஐபிசி 302 பிரிவில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், யாரையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள்” எனத் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
கடந்த 8-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, வழக்கை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.