

கேரளாவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் இடுக்கி அணை நிரம்பியதால் 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 10-ம்தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்கிறது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. இதில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் அமைந்துள்ள 10 அணைகள் முழுகொள் ளளவை எட்டியுள்ளன. வரும் 24-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்காரணமாக 10 அணைகளின் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8 அணைகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இடுக்கி அணை நிரம்பி வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் இடுக்கி அணை நீர்மட்டம் 2,391.36 கன அடியாக உயர்ந்தது. பின்னர் தொடர் மழையால் அணை நீர்மட்டம் 2,397 கன அடியாக உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் 2,398.85 கன அடியாகும்போது அணை திறக்கப்படும் எனவும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் இடுக்கி அணை நிரம்பியதால் 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இடுக்கி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் முதற்கட்டமாக வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இடுக்கி அணையிலிருந்து வரலாற்றில் ஐந்தாவது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுதோணி அணை என அழைக்கப்படும் இடுக்கி அணை முதலில் அக்டோபர் 29, 1981 அன்று திறக்கப்பட்டது, பின்னர் அக்டோபர் 12, 1992, ஆகஸ்ட் 9, 2018 மற்றும் அக்டோபர் 6, 2018 அன்று திறக்கப்பட்டது.