காதலுக்கு மழை தடையா? சமையல் பாத்திரத்தைத் தோணியாகப் பயன்படுத்தி கோயிலில் திருமணம் செய்த காதல் ஜோடி

சமையல் பாத்திரத்தைத் தோணியாக மாற்றி அமர்ந்து கோயிலில் திருமணம் செய்த ஆகாஷ், ஐஸ்வர்யா ஜோடி | படம்: ஏஎன்ஐ.
சமையல் பாத்திரத்தைத் தோணியாக மாற்றி அமர்ந்து கோயிலில் திருமணம் செய்த ஆகாஷ், ஐஸ்வர்யா ஜோடி | படம்: ஏஎன்ஐ.
Updated on
2 min read

காதல் திருமணத்துக்கு உறவுகள், மனிதர்கள் தடையாகலாம். சில நேரங்களில் இயற்கையே தடையாகிவிட்டால் என்ன செய்வது. ஆனால், அனைத்துத் தடைகளையும் தகர்த்து ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால், வெள்ள நீர் சூழ்ந்ததால் கோயிலுக்குள் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், சமையல் செய்யும் பாத்திரத்தைத் தோணியாகப் பயன்படுத்தி கோயிலுக்குள் சென்று காதல் ஜோடி திருமணம் செய்து அசத்தியுள்ளனர்..

ஐஸ்வர்யா, ஆகாஷ் ஜோடிதான் தடைகளைத் தகர்த்து திருமணம் செய்தனர். இதில் ஐஸ்வர்யா, அம்பலப்புழா நகரைச் சேர்ந்தவர். ஆகாஷ், தகழி நகரைச் சேர்ந்தவர். இருவருமே மருத்துவ செங்கனூரில் மருத்துவச் சுகாதாரப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள்.

கரோனா காலத்தில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கரோனாவுக்கு எதிராகப் போரிட்டபோது ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டபோது காதல் மலர்ந்தது.

இதில் ஐஸ்வர்யா உயர் சாதியைச் சேர்ந்தவர். ஆகாஷைத் திருமணம் செய்வதற்கு ஐஸ்வர்யா வீட்டில் அனுமதிக்கவில்லை. இருப்பினும் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணத்துக்குத் தயாராகினர்.

ஆலப்புழா மாவட்டம் தாளவாடி பண்ணையூர்காவு கோயலில் 18-ம் தேதி (நேற்று) திருமணம் செய்ய முடிவு செ்யதனர். ஆனால், குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கடந்த 5-ம் தேதியே பதிவுத் திருமணம் செய்துகொண்டாலும் முறைப்படி கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டித் திருமணம் செய்ய இருவரும் விரும்பினர்.

இதற்காக ஆகாஷின் சொந்த ஊரான தகழியில் உள்ள கோயில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்தபோது, அங்கு ஏற்கெனவே அனைத்துக் கோயில்களும் அடுத்த 15 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து தாளவாடியில் உள்ள பண்ணையூர்காவு கோயிலில் திருமணம் செய்ய ஆகாஷ், ஐஸ்வர்யா இருவரும் முடிவு செய்தனர். சிறியஅளவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த திருமணத்துக்கு நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

ஆனால், கேரள மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள், நகரங்கள், வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.

இந்த மழைக்கு ஐஸ்வர்யா, ஆகாஷ் திருமணம் நடக்கும் தாளவாடி பண்ணையூர்காவு கோயிலும் தப்பிவில்லை. கோயிலுக்குள் வெள்ளநீர் சூழ்ந்து கோயிலுக்குள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் ஆகாஷ், ஐஸ்வர்யாவுக்கு செல்போனில் தகவல் அளித்து திருமணத்தை வேறு நாளில் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டு, சூழல் விளக்கப்பட்டது.

ஆனால், ஆகாஷ், ஐஸ்வர்யா இருவரும் வேறு நாளில் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. நிச்சயக்கப்பட்ட நாளில் கோயிலுக்கு எப்படியாவது வருகிறோம், திருமணம் நடத்தித்தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து நேற்று மணமகன் ஆகாஷ், மணமகள் ஐஸ்வர்யா இருவரும் கோயிலுக்குள் வருவதற்கு கோயில் சார்பில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய அலுமினியப் பாத்திரத்தை தோணியாகப் பயன்படுத்தி அழைத்து வரப்பட்டனர்.

மணமக்கள் இருவரும் அலுமினியப் பாத்திரத்தை தோணி போன்று பயன்படுத்தி, அதில் அமர்ந்தவாறே கோயிலுக்குள் வந்தனர். கோயிலுக்குள் இருந்த மண்டபத்தில் இருவரும் முறைப்படி மாலை மாற்றித் திருமணம் செய்தனர்.

காதல் திருமணத்துக்கு உறவுகளால் ஏற்பட்ட தடையையும், இயற்கையால் உருவான தடையையும் தகர்த்து சமையல் பாத்திரத்தில் அமர்ந்து வந்து இந்த ஜோடி திருமணம் செய்தது கேரளாவில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in