

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் துபாய் அரசுக்கிடையே பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தானது. ரியல் எஸ்டேட், தொழிற் பூங்காங்கள், ஐடி வளாகங்கள், மருத்துவக் கல்லூரி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் சார்ந்து பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, "மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் முயற்சியால் காஷ்மீர் மற்றும் துபாய் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் துபாய் உடனான நல்லுறவு மேலும் பலமாகியுள்ளது" என்றார்.
இதுகுறித்து பியூஷ் கோயல் கூறும்்போது, "காஷ்மீருக்கும், இந்தியாவுக்கும் இது முக்கியமான நாள். மனோஜ் சின்ஹா தலைமையில் காஷ்மீர் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது துபாய் அரசுடன் கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், உலகின் சக்தி வாய்ந்த வல்லரசு நாடாக இந்தியாவை உருவாக்குவதில் காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும். மேலும் துபாயைச் சேர்ந்த பல நிறுவனங்கள் காஷ்மீர் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன" என்றார்.