

மூடும் நிலையில் இருந்த தமிழ்ப் பிரிவை 2023-ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக கொலோன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்விப் பிரிவில் தமிழுக்கானக் கல்வி கடந்த 58 ஆண்டுகளாக போதிக்கப்படுகிறது. ஆனால், நிதி நெருக்கடியால் கடந்த நவம்பர் 2020 முதல் தமிழ்ப் பிரிவை மூடுவதாக கொலோன் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. அதன்பின், தமிழ்ப் பிரிவை காக்க ஜெர்மனி வாழ் தமிழர்கள் மற்றும் ஐரோப்பியத் தமிழர் கூட்டமைப்பு முயற்சி எடுத்தது. இதற்காக, தமிழக அரசிடமும் நிதி உதவி கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ரூ.1.25 கோடியும், ஐரோப்பியத் தமிழர் கூட்டமைப்பு சார்பில் ரூ.23 லட்சமும் நிதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவை மார்ச் 2023-ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஐரோப்பியத் தமிழர் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகி பி.செல்வகுமார் கூறும்போது, ‘‘இப்பிரச்சினையை தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு தமிழக அரசு மற்றும் பொதுமக்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதில் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு முக்கியப் பங்கு உள்ளது. தற்போது கிடைத்துள்ள நிதியில் 2023 வரை தப்பிய தமிழ்ப் பிரிவை நிரந்தரமாகத் தொடர வைப்பது எங்கள் நோக்கம். இதற்காக, தமிழக அரசு அல்லது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஒரு தமிழ் இருக்கையும் அமைத்தால் மிகப் பெரிய உதவியாக இருக்கும். இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கையாக முன் வைக்கிறோம்’’ என்றார்.
கொலோன் பல்கலைக்கழகம், கடந்த 1963-ல் தொடங்கியது முதல் தமிழ்த் துறையில் சிறந்த ஆய்வாளர்களையும், வல்லுநர்களையும் உருவாக்கி உள்ளது. இதன் பேராசிரியர்களில் ஒருவரான உல்ரிக் நிக்லஸ், தமிழக அரசின் ஜி.யு.போப் விருதை கடந்த ஆண்டிலும், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை நடப்பு ஆண்டிலும் பெற்றுள்ளார். இங்கு மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரிய தமிழ் நூலகம் அமைந்துள்ளது. இதில் ஆய்வுக்கு உதவும் வகையில் சுமார் 40,000 தமிழ் நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.