

கேரளாவில் கனமழை, நிலச்சரிவால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் ஆண்டுக்கு இருமுறை பருவ மழை காலம் வருகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தென் மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பரில் வடகிழக்கு பருவ மழையும் பெய்கிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் முடியவில்லை. வடகிழக்கு பருவ மழை இன்னும் தொடங்கவில்லை.
இந்த சூழலில் கடந்த 10-ம்தேதி தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைஉருவானது. இதன் காரணமாக கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்கிறது. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. இதில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் மோசமான நிலையில் உள்ளன.
கனமழையால் கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிங்கால், இடுக்கி மாவட்டத்தின் கோக்கையார் பகுதிகளில் கடந்த 16-ம் தேதிநிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 23 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. பல்வேறு படையினர் இரவு பகலாக மீட்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கேரளா முழுவதும் கனமழை, நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண் ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது
மாநிலம் முழுவதும் 184 நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 10,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானப்படை, கடற்படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் அமைந்துள்ள 10 அணைகள் முழுகொள் ளளவை எட்டியுள்ளன. வரும் 24-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்காரணமாக 10 அணைகளின் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8 அணைகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஆலோசனை
கனமழை பாதிப்பு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், அணை களை திறப்பது தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் 81 அணைகளின் நீர்நிலையை பொறுத்து அவர்கள் முடிவு எடுப்பார்கள். வெள்ள அபாய பகுதிகள், நிலச்சரிவு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப் படுகின்றனர்" என்று தெரிவித்தார்.
மாநில வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் கூறும்போது, "கனமழை, நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலையில் வரும் 21-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி யில்லை" என்று தெரிவித்தார்.
கேரளாவில் கல்லூரிகள் நேற்று திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. கனமழை பாதிப்பு காரணமாக வரும் 25-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவில் பெய்த கனமழையால் 400 பேர் உயிரிழந்தனர். சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மீண்டும் அதுபோன்ற சூழ் நிலையை கேரளா இப்போது எதிர்கொண்டிருக்கிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.