

லக்கிம்பூர் கெரி வன்முறைக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் 160 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3-ம் தேதி லக்கிம்பூர் கெரிக்கு மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியாணா மற்றும் உ.பி.யின் வடக்கு மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு ரயில்வே மண்டலத்தில், ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவில் சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, 13 பகுதி ரத்து செய்யப்பட்டன. ஒன்று போராட்டத்தின் காரணமாக திருப்பி விடப்பட்டது. ராஜஸ்தானில், பிகானிரில் ஹனுமங்கர் மற்றும் ஸ்ரீகங்காநகர் ஆகிய இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடக்கு ரயில்வே மண்டலத்தில் ரயில்களில் சண்டிகர்- ஃபெரோஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லூதியானாவில் இருந்து புறப்பட வேண்டிய ஃபெரோஸ்பூர்-லூதியானா எக்ஸ்பிரஸ் போராட்டத்தால் இயக்கப்படவில்லை.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் கூறியதாவது:
விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் 130 இடங்களில் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 160 ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், உத்தரபிரதேசத்தில் எந்த ரயிலும் நிறுத்தப்படவில்லை, அங்கு இயல்பு நிலையை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.