லக்கிம்பூர் கெரி; அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல்

லக்கிம்பூர் கெரி; அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல்
Updated on
1 min read

லக்கிம்பூர் கெரி சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3-ம் தேதி லக்கிம்பூர் கெரிக்கு மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியாணா மற்றும் உ.பி.யின் வடக்கு மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in