Published : 18 Oct 2021 11:35 AM
Last Updated : 18 Oct 2021 11:35 AM

வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா; பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

திருவனந்தபுரம்

கேரளாவில் மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.

தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்றதால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது.

தெற்கே திருவனந்தபுரம் தொடங்கி வடக்கே காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்துவருகிறது. இடைவிடாது பெய்தமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

குறிப்பாக, திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர,மற்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மாநிலத்தில் உள்ள எல்லா நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நதிகளை ஒட்டியுள்ள பல மாவட்டங்களை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகள் நீரில்மூழ்கி கடல்போல காட்சி அளிக்கின்றன. பேருந்துகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

பலத்த மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிங்கால் மற்றும் இடுக்கி மாவட்டத்தின் கோக்கையார் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பல வீடுகள் சேற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 27 ஆக உயர்ந்துள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x