

டிஜிட்டல் மார்க்கெட்டிங், திடக்கழிவு மேலாண்மை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் 70 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் கண்டுபிடிகக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்நத 2 வணிக குழும நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடந்த 12-10-2021 அன்று இரண்டு குழுக்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பிரச்சார மேலாண்மை வணிகத்தில் ஈடுபட்டு வரும் முதல் நிறுவனத்தை சேர்ந்த பெங்களூரு, சூரத், சண்டிகர் மற்றும் மொகாலி உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள அலுவலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில் அந்த நிறுவனம் கணக்கில் காட்டப்படாத உள்ளீடுகளை பெற்று வருமானத்தை மறைத்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஹவாலா ஏஜென்டுகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்து வருமானத்தை மறைத்து முறைக்கேட்டில் ஈடுபட்டத்தை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது செலவினங்களை அதிகரித்தும், வருவாயை குறைத்து காண்பித்ததும் கண்டறியப்பட்டது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களின் தனிப்பட்ட செலவீனங்களை வணிக செலவீனமாக ஆவணங்களில் காண்பித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இயக்குனர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நவீன சொகுசு வாகனங்களை அந்நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்களின் பெயரில் வாங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் திடக்கழிவு மேலாண்மையில் ஈடுபட்டு வரும் குழுமத்தின் மீதும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நாடு தழுவிய அளவில் திடக்கழிவு சேகரிப்பு, போக்குவரத்து செயலாக்கம் மற்றும் கழிவுகளை அகற்றுதல் ஆகிய பணிகளை இந்த நிறுவனம் நகராட்சிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த சோதனை நடவடிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், உதிரி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போலியான ரசீதுகளை உருவாக்கி செலவினங்களையும், துணை ஒப்பந்த ஆவணங்களை உருவாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்டமாக 70 கோடி ரூபாய் அளவுக்கு முறைக்கேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கணக்கில் காட்டப்படாத 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முதலீடு குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. இந்த சோதனை நடவடிக்கைகளின் மூலம் கணக்கில் காட்டப்படாத 1.95 கோடி ரூபாயும், 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேடுகளில் ஈடுபட்ட இந்த 2 குழுமங்கள் மீதும் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.