

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வியாபாரிகள், அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பிஹாரைச் சேர்ந்த இரு வியாபாரிகள் கொலை செய்யப்பட்டனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் வான்போ எனும் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சாலையோர வியாபாரி அர்பிந்த் குமார் ஷா கொல்லப்பட்டார். அதே போல் புல்வாமாவில் தச்சுத் தொழிலாளியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். நேற்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் இருவர் கொல்லப்பட்டனர். இதுவரை மொத்தம் 11 பேர் கொலப்பட்டனர். இவர்களில் 5 பேர் பிஹார் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இறந்தவர்களின் விவரம் வருமாறு:
காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் மக்கன் லால் பிந்த்ரூ, டாக்ஸி ஓட்டுநர் முகமது ஷாஃபி லோன். ஆசியர்கள் தீபக் சந்த், சுபேந்தர் கவுர், தெருவோர வியாபாரி வீரேந்தர் பாஸ்வான், சாலையோர வியாபாரி அர்பிந்த் குமார் ஷா, தச்சுத் தொழிலாளி சாகிர் அகமது உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக சாலையோர வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீநகரில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் 9 என்கவுன்ட்டரில் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.