

மத்திய பிரதேச கிராமத்திலிருந்து 700 கி.மீ. நடந்தே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார் ஒரு முதியவர்.
மத்திய பிரதேச மாநிலம் சாகர்மாவட்டத்துக்குட்பட்ட தியோரி கிராமத்தைச் சேர்ந்தவர் சோட்டாலால் அஹிர்வார் (63). தலித் சமூகத்தைச் சேர்ந்த பாஜக தொண்டரான இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபயணமாக டெல்லி புறப்பட்டார்.
இதையடுத்து, பாஜகவின் முக்கிய பிரமுகரானார். அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் மற்றும் மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா உள்ளிட்டோரின் கவனத்தை ஈர்த்தார் சோட்டாலால். 22 நாள் நடைபயணத்துக்குப் பிறகு கடந்த 11-ம் தேதி சுமார் 700 கி.மீ. தொலைவில் உள்ள டெல்லியை சென்றடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல், சோட்டாலாலை தனது இல்லத்துக்கு வரவழைத்து தங்க வைத்தார். பிரதமரை சந்திப்பதற்கான நேரம் கிடைக்கும் வரை அங்கு தங்கியிருந்தார்.
இந்நிலையில், சோட்டாலால் கடந்த 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தனது கிராமத்தில் நிலவும் வேலையின்மை பிரச்சினை குறித்து பிரதமரிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தார்.
இதுகுறித்து சோட்டாலால் கூறும்போது, “பிரதமர் என்னை கட்டி அணைத்தார். மேலும் நடைபயணத்தின்போது வழிப்பறி கொள்ளையர்கள் என்னை மிரட்டினர். ஆனால் மதிப்புமிக்க பொருள்எதுவும் இல்லாததால் அவர்கள் என்னை விட்டுவிட்டனர். இதுகுறித்து பிரதமரிடம் தெரிவித்தேன். அவர் கனிவாக கேட்டுக் கொண்டார்.
என்னுடைய தியோரி கிராமத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கஒரு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளேன். தலித் சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவரிடம் எடுத்துரைத்தேன்” என்றார்.