

தனியார் நிறுவனமாக இருந்து பொதுத்துறை நிறுவனமாக மாறி மீண்டும் தனியார் மயமாகிறது ஏர் இந்தியா. இதில் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் எந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்டதோ அதே நிறுவனம் வசம் (டாடா) மீண்டும் செல்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் மூன்று முறை ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் டாடா ஈடுபட்டது. இறுதியாக இப்போதுதான் அம்முயற்சி கைகூடியுள்ளது. தனியாரால் டாடா ஏர்லைன்ஸாக தொடங்கப்பட்டு பின்னர் அரசுடமையாக்கப்பட்டு இப்போது மீண்டும் தொடங்கிய நிறுவனம் வசமே செல்லும் அரிய நிகழ்வு இதுவாகத்தானிருக்கும். அது கடந்து வந்த சுவாரஸ்யமான பாதைகளைப் பார்ப்போம்
1932 – ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாயால் (ஜேஆர்டி) தொடங்கப்பட்டது டாடா ஏர்லைன்ஸ். விமான நிறுவனம் தொடங்கலாம் என்ற எண்ணத்தை டாடா மனதில் விதைத்தவர் ராயல் விமானப்படை பைலட்டாக பணியாற்றிய நெவில் வின்சென்ட். 1929-ல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குவந்தபோது, ஒருங்கிணைந்த இந்தியாவில் விமான சேவைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதை உணர்ந்து அதை ஜே.ஆர்.டி. டாடாவிடம் கூறினார். ஏறக்குறைய 3 முறை அரசால் நிராகரிக்கப்பட்டு பின்னர் 4-வது முயற்சியில் டாடா-வின்சென்ட் அளித்த விமான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இதன்படி ஒற்றை என்ஜின் கொண்ட விமானம் மும்பை - கராச்சி இடையே அகமதாபாத் வழியாக1932-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி இயக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸாக தொடங்கப்பட்டு முதலில் சரக்கு போக்குவரத்துக்குத்தான் இது பயன்படுத்தப்பட்டது. அந்நாளில் போதிய விமான ஓடுபாதை கிடையாது. விமானநிலையங்கள், கட்டுப்பாட்டு அறை, தொலைத் தொடர்பு இணைப்பு வசதி எதுவும் கிடையாது. விமானத்தை புல்தரையில் இறக்கி மீண்டும் புறப்படுவதே வழக்கம்.
1933-ம் ஆண்டு மும்பையிலிருந்து பெல்லாரி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டது. முதலாண்டில் இந்நிறுவனம் கையாண்ட பார்சல்களின் அளவு 10.71 டன். பயணித்த தூரம் 1.60 லட்சம் மைல்கள். பயணிகளின் எண்ணிக்கை 155. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே நிறுவனத்தின் பெயரை ஏர் இந்தியா என மாற்றினார் ஜே.ஆர்.டி. டாடா.
1948-ம் ஆண்டு மும்பை-லண்டன் சேவை கெய்ரோ, ஜெனீவா வழித்தடத்தில் சர்வதேச விமான சேவையை இந்நிறுவனம் தொடங்கியது. தனியார், அரசு பங்களிப்பில் சர்வதேச விமான சேவையாக இது ஆரம்பமானது. இதில் அரசுக்கு 49 சதவீத பங்குகளும், டாடா நிறுவனத்துக்கு 25சதவீத பங்குகளும், எஞ்சியவை பொதுமக்கள் வசமும் இருந்தன. அப்போது பயண நேரம் 24 மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்தது. முதலாவது சர்வதேச விமானத்தை இயக்கியவர் கேப்டன் கெகி ருஸ்தம் குஸ்தர்.
லண்டனுக்கு பயணித்த முதல் விமானத்தில் தொழிலதிபர்கள் நெவில் வாடியா, நரோத்தம் லால்பாய், நவநகர் இளவரசர் ஜம் ஷாகிப், சவுராஷ்டடிரா மாகாணத்தின் ராஜ வம்சத்தினர், மகாராஜா துலீப் சிங்ஜி மற்றும் லெப்டினன்ட் கர்னல் டபிள்யூ கிரே உட்பட 35 பயணிகள் இருந்தனர். விமான கட்டணம் ரூ.1,720. இவர்களுடன் 164 தபால் பைகளும் பயணித்தன.
ஏர் இந்தியா விமானத்தின் இலச்சினையாக முதலில் சூரியன் இடம்பிடித்தது. இதைக் குறிக்கும் விதமாகவும், மேற்கத்திய நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட்டதை உணர்த்தும் விதமாகவும், சூரியன் கிழக்கில் உதிக்கும், இன்றிலிருந்து மேற்கிலும்... என்கிற ஆங்கில விளம்பரம் பலரையும் கவர்ந்தது.
1953-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் அரசு நிறுவனமாக மாறியது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு விமான போக்குவரத்தில் அரசு பெரும்பங்கு வகித்தது.
1994-95-ல் தனியார் விமான நிறுவனங்கள் குறைந்த விலையில் விமான சேவை வழங்கத் தொடங்கியதால் ஏர் இந்தியாவின் ஆதிக்கம் சரியத் தொடங்கியது.
2000-2001-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு 40 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சித்தது. ஆனால் அது கைகூடவில்லை.
2007-ம் நிதி ஆண்டிலிருந்து தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தது ஏர் இந்தியா. உள்நாட்டு போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் சர்வதேச விமானபோக்குவரத்து சேவையில் இருந்த ஏர் இந்தியா இரண்டும் இணைக்கப்பட் டபிறகு நஷ்டம் ஆரம்பமானது.
2004-14 வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்நிறுவனத்தை சீரமைக்க பல முயற்சிகளை மேற்கொண்டபோதும் பயனளிக்கவில்லை.
2014-ம் ஆண்டு பதவிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசும் பங்குகளை இதன் விற்க நடவடிக்கை எடுத்தது. 2018-ம் ஆண்டில் ஒரு முறை டெண்டர் விடப்பட்டது. அதில் போதிய நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. அடுத்து 2020-ம் ஆண்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2021-மார்ச்சில் மீண்டும் டெண்டர் கோரப்பட்டது. டாடா குழுமம் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கேற்றன. இறுதியில் டாடா ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதாக அரசு அறிவித்துள்ளது.
ஒற்றை என்ஜின் கொண்ட புஸ்மோத் விமானத்தில் தொடங்கி, ஜெட் ஏர்லைன்ஸ், போயிங் விமானங்களை இயக்கும் டாடா நிறுவனம் வசமே இந்தியன் ஏர்லைன்ஸ் சென்றாலும், அது பயணித்த கரடு முரடான பாதை இனிப்பான அனுபவங்கள், முக்கிய பிரமுகர்கள் பயணித்தது உள்ளிட்ட பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது என்பது சொல்லாமல் புரியும்.
நன்றி:
இந்து ஆவண காப்பகம்
உதவி: ஆ. சங்கரன், விபா சுதர்சன்