Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

தந்தைக்கு சிறுநீரக தானம் செய்ய அனுமதிக்க கோரி சிறை கைதி மனு: மருத்துவப் பரிசோதனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தந்தைக்கு சிறுநீரக தானம் செய்ய அனுமதி கோரி சிறைக் கைதி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், கடந்த ஜூன் மாதம் மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “என் தந்தையின் சிறுநீரகம் செயலிழந்து விட்ட காரணத்தால், அவருக்கு எனது சிறுநீரகத்தை வழங்க விரும்புகிறேன். இதற்கான மருத்துவ நடைமுறைகள் நிறைவடையும் வரை எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம், நிராகரித்தது.

இதையடுத்து அவர் அண்மை யில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், “போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய மனுதாரருக்கு (கைதி) இடைக் கால ஜாமீன் வழங்குவது முறையாகாது. தவிர, இவருக்கு சகோதர, சகோதரிகள் இருப்பதால் அவர்கள் தங்கள் தந்தைக்கு சிறுநீரகம் வழங்க முடியும்" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

உயிருக்கு போராடி வரும் தனது தந்தைக்கு சிறுநீரக தானம் செய்ய விரும்புவது ஒரு மகனின் உரிமையாகும். அதுமட்டுமின்றி, அவருக்கு சகோதரர், சகோதரிகள் இருப்பதால் அவர்கள் தங்கள் தந்தைக்கு சிறுநீரக தானம் செய்வார்கள் என உறுதியாக நம்ப முடியாது. இது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. எனவே, மனுதாரரின் கோரிக்கைக்கு மதிப் பளிக்க வேண்டியது அவசியம். அதன்படி, சிறுநீரக தானம் வழங்க அவரது உடல் தகுதிவாய்ந்ததா என்பதை பரிசோதிக்க அவரை சிறைத் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதில் அவருக்கு அதற்கான உடல் தகுதி இருப்பது தெரியவந்தால், இதுதொடர்பாக மனுதாரர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யலாம். இந்த மனுவை மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x