

அரச குடும்பம், சாதி பின்னணி என எதுவுமே இல்லாமல் நாட்டை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் புறநகர் பகுதியில் காணொலி மூலம் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் விடுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
நான் பொதுமக்களில் ஒருவனாக இருந்தேன். அதாவது எனக்குஅரசியல் அல்லது அரச குடும்பத்துபின்னணியோ சாதி ரீதியான அரசியல் ஆதரவோ இல்லை. ஆனாலும் உங்களின் (பொதுமக்கள்) ஆசிதான் 2001-ம் ஆண்டு குஜராத்துக்கு சேவை புரிவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியது. இந்த ஆசி தொடர்வதால் 20 ஆண்டுகளைக் கடந்தும் நாட்டு மக்களுக்கு நான் சேவை செய்து வருகிறேன். முதலில் குஜராத்துக்கு சேவையாற்றிய நான் இப்போது நாடு முழுவதற்கும் சேவை செய்கிறேன்.
சாதியும் மத நம்பிக்கைகளும் நமக்கு தடையை ஏற்படுத்துவதை நாம் அனுமதிக்கக் கூடாது என சர்தார் வல்லபபாய் படேல் கூறியுள்ளார். நாம் அனைவரும் இந்தியாவின் மகன், மகள்கள். நாம் நாட்டைநேசிக்க வேண்டும். படேலின் கொள்கைகளை வலுப்படுத்துவதில் குஜராத் மக்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஒரு காலத்தில் குஜராத்தில் தரமான பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத சூழல் இருந்தது. ஆனால்பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கல்வியாளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளின் ஆலோசனைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் இப்போது சிறந்த கல்வி நிலையங்களும் சிறந்த ஆசிரியர்களும் உருவாகிஉள்ளனர். முன்பு பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் மாணவிகள் பள்ளிப் படிப்பையே பாதியில் கைவிட்டனர். இப்போது கழிப்பறை வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதால் மாணவிகளின் இடைநிற்றல் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ