

காஷ்மீரில் நிலவி வரும் அமைதியான சூழலை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானில் புதிய தீவிரவாத இயக்கத்தை ஐஎஸ்ஐ வளர்த்தெடுத்துள்ளதாக இந்திய உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசுக்கு உதவியாக இருக்கும் பத்திரிகையாளர்கள், காஷ்மீரி அல்லாதோர் ஆகியோரை இலக்காக கொண்டு இந்த தீவிரவாத இயக்கத்தினர் களம் இறங்கவுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக 200 இடங்களை அந்த தீவிரவாத அமைப்பு தேர்வு செய்துள்ளதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமாவில் அண்மையில் இரு போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.