Last Updated : 16 Oct, 2021 04:42 PM

 

Published : 16 Oct 2021 04:42 PM
Last Updated : 16 Oct 2021 04:42 PM

நான்தான் முழு நேரத் தலைவர்; ஊடகங்கள் மூலம் என்னிடம் பேசாதீர்கள்: கபில் சிபலுக்கு சோனியா காந்தி பதிலடி

டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்ற காட்சி | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் நான்தான். கட்சியின் தலைவரும் நான்தான். கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் யாரும் ஊடகங்கள் மூலம் என்னிடம் பேசத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் பேசுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர்? முழு நேரத் தலைவர் இல்லாத நிலையில் யார் முடிவுகளை எடுக்கிறார்கள் எனத் தெரிவது அவசியம். விரைவாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூட்ட வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார். மேலும் ஜி-23 தலைவர்களும் முழு நேரத் தலைவர் கோரி அதிருப்தி தெரிவித்தனர்.

அவர்கள் அனைவருக்கும் இன்று நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அதிருப்தி தலைவர்கள் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சிறப்பு அழைப்பாளர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜுன கார்கே, கே.கே.வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

''காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும், கட்சி புத்துணர்வு பெற வேண்டும், மறுமலர்ச்சி அடைய வேண்டும் என விரும்புகிறார்கள். ஒற்றுமையுடன், சுயக் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்துடன், கட்சியின் நலனைப் பிரதானமாகக் கொண்டு நடந்தால்தான் கட்சியின் மறுமலர்ச்சி இருக்கும்.

காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் நான்தான். நீங்கள் என்னைக் கூற அனுமதித்தால் நான்தான் முழு நேரத் தலைவர் என்று கூறுவேன். நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர்களை வரவேற்பேன். ஆதலால், மூத்த உறுப்பினர்கள் என்னிடம் கருத்து ஏதும் கூற விரும்பினால் நேரடியாகக் கூறலாம். ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

நமக்குள் நேர்மையான, சுதந்திரமான விவாதங்கள் நடக்கின்றன. அப்படியிருக்கும்போது, காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இந்த 4 சுவர்களுக்குள் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏன் வெளியே சென்று பேசுகிறீர்கள்? நீங்கள் கோரியபடி, தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவது குறித்த அறிக்கையையும் உங்கள் முன் வைக்கிறேன்.

கடந்த 2 ஆண்டுகளாக ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக இளம் தலைவர்கள் தலைமைப் பதவிகளை எடுத்து, கட்சியின் கொள்கைளை, திட்டங்களை மக்களிடம் சேர்க்கிறார்கள். சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய மக்கள் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த விஷயத்தையும் நாம் பேசாமல் இருந்தது இல்லை. இதை நீங்கள் அறிவீர்கள்.

இதுபோன்ற விஷயங்களை நான் பிரதமரிடமும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், ராகுல் காந்தியிடமும் கொண்டு சென்றிருக்கிறேன். நம்முடைய சிந்தனைக்கு ஒத்துழைக்கும், ஒத்துச் செல்லும் கட்சித் தலைவர்களுடன் நான் சீராகப் பேசி இருக்கிறேன்.

அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இந்தத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக, ஒழுக்கமாக, கட்சியின் நலனை மட்டும் பிரதானமாகக் கருதிச் செயல்பட்டால், நிச்சயமாக நாம் வெல்வோம் என நம்புகிறேன்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். லக்கிம்பூர் கெரி வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சி தரும் சம்பவங்கள் பாஜகவின் மனநிலையை பிரதிபலிக்கிறது. விவசாயிகளின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

நாட்டின் சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மீட்சி இருக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் ஒரே நோக்கம் விற்கணும், விற்கணும் என்பது மட்டும்தான்.

கடந்த மே மாதம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, தடுப்பூசி குறித்து பேசப்பட்டபின் மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையில் மாற்றம் வந்தது. கூட்டாட்சித் தத்துவத்தைத்தான் தொடர்ந்து நாம் உரக்கக் கூற வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்பட மத்திய அரசு எந்த வாய்ப்பும் வழங்காது.

எல்லைப் பகுதிகளில் நாம் பல தீவிரமான சவால்களைச் சந்தித்து வருகிறோம். கடந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நம்முடைய எல்லைப் பகுதியில் சீனாவால் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் நடக்கவில்லை என்றார். ஆனால், தொடர்ந்து அவர் மவுனமாக இருப்பதால் பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும்''.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x