

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சில் வழக்கம்போல் அரைவேக்காடு உண்மையும், முழுப் பொய்யும் கலந்திருக்கிறது என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி சாடியுள்ளார்.
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்தில் அந்த அமைப்பின் 96-வது ஆண்டு விழா மற்றும் விஜயதசமி பண்டிகைக் கொண்டாட்டம் நேற்று நடந்தது.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுப்பைப் பார்வையிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், “நாட்டில் வேகமாக அதிகரித்துவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த மக்கள்தொகை கொள்கை தேவை. தற்போதைய சூழ்நிலையில், பூர்வீக இந்துக்கள் மீதான துன்புறுத்தல், அதிகரிக்கும் குற்றமயமாக்கல் மற்றும் தங்கள் பகுதிகளில் சமநிலையற்ற மக்கள்தொகை வளர்ச்சி போன்றவற்றால் தாங்கள் வாழும் பகுதியிலிருந்து இந்துக்கள் தப்பிக்க அழுத்தம் அதிகரிக்கிறது” எனத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''வழக்கம் போல ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சில் முழுப் பொய்களும், அரைவேக்காடு உண்மைகளும் இருந்தன. மக்கள்தொகை கொள்கை தேவை எனக் கேட்டிருந்தார். முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்கள்தொகை அதிகரித்துவிட்டதாகப் பொய்யும் கூறியிருந்தார். ஆனால், உண்மையில் முஸ்லிம் மக்களின் வளர்ச்சி வீதம் வேகமாகக் குறைந்துள்ளது. இதில் மக்கள்தொகை சமநிலையற்ற தன்மை இல்லை.
சமூகக் கொடுமையான குழந்தைத் திருமணங்கள், பெண் சிசுக்களைக் கருவிலேயே கலைத்தல் போன்றவைதான் கவலைப்பட வேண்டிய ஒன்று. குழந்தைத் திருமணங்கள் நடந்ததில் 84 சதவீதம் இந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2001-2011ஆம் ஆண்டுக்கு இடையே முஸ்லிம் சமூகத்தில் ஆண்-பெண் இடையிலான விகிதம் என்பது ஆயிரம் ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற அளவிலிருந்து 951 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இந்து சமூகத்தில் 931 முதல் 939 வரை அதிகரித்துள்ளது.
மோகன் பாகவத் இந்தியாவில் அதிகரித்துவரும் வயதானவர்கள் குறித்து கவலைப்படவில்லையே. இளம் தலைமுறையினர் வயதானவர்களுக்கு உதவுவது அவசியம். மோகன் பாகவத் அவரின் மாணவரான பிரதமர் மோடிக்கு இதுகுறித்துக் கூறவேண்டும்.
பிரதமர் மோடியைப் போல் மக்கள்தொகை விகிதத்தை யாரும் அழித்தது இல்லை. இந்தியாவில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். கல்வியறிவு போதாமல், அரசின் ஆதரவு இல்லாமல், வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.
பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று ஒரு தேசத்தின் பிரதமர் அளித்த வாக்குறுதியைத் தவிர என்ன செய்ய முடியும். மக்கள்தொகை கொள்கை கொண்டுவந்தால், பணி செய்யும் பிரிவில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இருப்பார்கள். வயதான பிரிவினருக்கு யார் ஆதரவு அளிப்பது?
தலிபான்களைத் தீவிரவாதிகள் என மோகன் பாகவத் அழைத்தார். இது பிரதமர் மோடி மீதான நேரடித் தாக்குதலாகும். மோடி அரசுதான் தலிபான்கள் பிரதிநிதிகளைத் தூதரகத்தில் அழைத்துப் பேசியது. தீவிரவாதிகளாக இருந்தால், தலிபான்களை யுஏபிஏ தடைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வருமா?
370 சிறப்புச் சட்டத்தை ரத்து செய்தபின் ஜம்மு காஷ்மீர் மக்கள் பயன்பெறுகிறார்கள் என்று மோகன் பாகவத் பேசியுள்ளார். சமீபத்தில் 29 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இன்டர்நெட் தடை செய்யப்பட்டன, தடைகள் விதிக்கப்பட்டன. இந்தியாவில் அதிகபட்சமான வேலையின்மை சதவீதமான 21.6% ஜம்மு காஷ்மீரில்தான் இருக்கிறது என்பது தெரியுமா?
என்ஆர்சியை மீண்டும் கொண்டுவர மோகன் பாகவத் வலியுறுத்துகிறார். என்ஆர்சி என்பது ஒன்றுமில்லை. ஆனால், சந்தேகப்படும் மக்களைத் துன்புறுத்தக்கூடிய ஓர் ஆயுதம். ஆக்சிஜன் பற்றாக்குறையில் உயிரிழந்தவர்கள், கரோனாவில் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாியகள், தற்கொலை என உயிரிழந்தவர்கள் குறித்த கணக்கு மத்திய அரசிடம் இல்லை. ஆனால், 1.37 கோடி மக்களின் குடியுரிமையை எவ்வாறு சரிபார்க்கும்?''
இவ்வாறு ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.