

உத்தரப் பிரதேச பள்ளி, கல்லூரிகளில் அனைத்து மாணவிகளுக்கும் தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொடுக்க முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் தலைமைச் செயலாளர் அலோக் ரஞ்சன், காவல் துறை தலைவர் ஏ.எல். பானர்ஜி, மாநில காவல் துறை பெண்கள் பிரிவுத் தலைவர் சுதாபா சன்யால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் அகிலேஷ், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவி களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் அலோக் ரஞ்சனிடம் முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும் பெண்களின் அவசர உதவிக் காக செயல்படும் 1090 இலவச தொலைபேசி எண் சேவையையும் முதல்வர் ஆய்வு செய்தார். இந்த தொலைபேசி அழைப்பில் வரும் புகார்கள் குறித்து விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் கண்டிப்புடன் உத்தரவிட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் பதான் மாவட்டத்தில் அண்மையில் 2 சிறுமிகள் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப் பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.