

காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் மற்றும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவிருக்கிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தலைமைப் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அதன்பின்னர், தற்போது வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருக்கிறார்.
இந்நிலையில், அடுத்த தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இன்று முக்கிய முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. காங்கிரஸுக்கு புதிய தலைமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குலாம் நபி ஆசாத், கபில் சிபல், அபிஷே மனு சிங்வி உள்ளிட்ட 23 பேர் அடங்கிய ஜி23 யின் கோரிக்கை இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக தான் ஆட்சியில் உள்ளது. பஞ்சாபில் உட்கட்சிப் பூசல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உத்தரப் பிரதேசத் தேர்தல் என்பது அடுத்து வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோடமாகவே பார்க்கப்படுகிறது
ஆகையால் இந்த ஐந்து மாநிலத் தேர்தல் என்பது காங்கிரஸ் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்திருக்கிறது.