

சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) தெரிவித் துள்ளது.
ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, இந்த தகவலை என்சிபி தெரிவித்தது.
மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்றகேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிஅமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 3-ம் தேதி அந்தக் கப்பலில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 20 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தூர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவானது, நீதிபதி வி.வி. பாட்டீல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க என்சிபி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து என்சிபி சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் முன்வைத்த வாதம்:
ஆர்யன் கான் கடந்த சில வருடங்களாக போதைப்பொருட்களை அடிக்கடி வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமும் அவர் தொடர்பில் இருந்துள்ளார். இது, அவரது வாட்ஸ் அப் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன்அடிப்படையிலேயே அவர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டிருக் கிறது. இதுதவிர, சர்வதேச போதைப்பொருள் கும்பலுடனும் ஆர்யன் கானுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இதுகுறித்து விசாரிக்க வெளியுறவுத் துறை அமைச்ச கத்தை அணுகியுள்ளோம். இதுபோன்ற சூழலில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது என அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதி ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.
இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு அவரது தந்தையும், பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் ரூ.4,500 அனுப்பியுள்ளார். சிறைச்சாலை விதிகளின்படி, கைதி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4,500 மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இந்த தொகை அவருக்கு கடந்த திங்கள்கிழமை அனுப்பப்பட்டது.
இதனை பயன்படுத்தி சிறைக்கேண்டீனில் உள்ள உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆர்யன் கானை ஷாருக்கானும், அவரது மனைவி கவுரி கானும் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியதாக சிறைக் கண்காணிப்பாளர் நிதின் வாய்ச்சால் கூறினார்.
- பிடிஐ