

‘‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்க மத்திய அரசு சட்ட விரோதமாக முயற்சிக்கிறது’’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பிஸ்வாநாத் சரியாலி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் சோனியா பேசியதாவது:
அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை முதலில் கலைத்தது மத்திய அரசு. இப்போது உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்துள்ளது. ஜனநாயகத்துக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
சாத்தியகூறுகள் இருந் திருந்தால், அசாம் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்திருப்பார்கள். அசாமுக்கு எதிரானவர்கள் அவர்கள். மோடி தலைமையிலான பாஜக அரசு சட்டத்தை மதிக்கவில்லை. மகாத்மா காந்தியும் அம்பேத்கரும் ஜவஹர்லால் நேருவும் இந்த நாட்டில் உருவாக்கிய ஜனநாயகம், சட்டத்தை பாஜக.வினர் நம்புவதில்லை.
இவ்வாறு சோனியா குற்றம் சாட்டினார்.