

பாகிஸ்தானுடன் அமைதி மற்றும் நட்புறவை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தேசிய தினம் (1940-ம் ஆண்டின் லாகூர் தீர்மான நாள் மற்றும் 1956-ம் ஆண்டின் குடியரசு தினம்) இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனுக்கு பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள செய்தியில் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தானுடன் அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது. நம்மிரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மூலம் நமது பிராந்தியத்தில் வளர்ச்சியும் செழிப்பும் ஏற்படும் என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன். நீங்கள் உடல் நலமுடன் வாழ இத்தருணத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரணாப் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.