சக்திமான் குதிரைக்கு செயற்கைக் கால்: சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ கைது

சக்திமான் குதிரைக்கு செயற்கைக் கால்: சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ கைது
Updated on
2 min read

சக்திமான் குதிரையைத் தாக்கிய பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் கண்டித்து பாஜக.வினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தராகண்ட் மாநில காவல் துறையில் சக்திமான் என்கிற வெள்ளைக் குதிரை பணியாற்றி வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் இந்தக் குதிரை அணிவகுப்பில் பங்கேற்கும். இந்நிலையில், உத்தராகண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக கடந்த 14-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி, சக்திமான் குதிரையைத் தாக்கி யதாக புகார் எழுந்தது. இதில் குதிரையின் இடது கால் முறிந்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குதிரையைத் தாக்கிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பினர்.

இதையடுத்து கணேஷ் ஜோஷியை போலீஸார் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் ஆவேசமடைந்த உத்தராகண்ட் பாஜகவினர் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்த பாஜக தலைவர் அஜய் பட், போலீஸார் கணேஷ் ஜோஷியை கடத்திச் சென்று விட்டதாக புகார் தெரிவித்தார்.

பாஜக குற்றச்சாட்டு

முன்னதாக குதிரையைத் தாக்கியதாக கணேஷ் ஜோஷி மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை டேராடூன் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில், குதிரையின் உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை மூலம் முறிந்த காலை மருத்துவர்கள் அகற்றினர். அத்துடன் சக்திமானுக்கு செயற்கைக்காலும் பொருத்தினர். இதற்காக பூட்டானில் இருந்து அமெரிக்க கால்நடை நிபுணர் வரவழைக்கப்பட்டார்.

400 கிலோ எடை கொண்ட சக்திமான் குதிரைக்கு செயற்கைக் கால் பொருத்தியிருப்பதால் விரைவில் குணமடையும் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதே சமயம் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் முன்னா சிங் சவுகான் கூறும்போது, ‘‘அறுவை சிகிச்சை செய்த மறுநாளே குதிரையை நிற்க வைக்க முயற்சித்துள்ளனர். 400 கிலோ எடை உள்ள குதிரையால் ஒரே நாளில் எப்படி குணமடைந்து நிற்க முடியும். குதிரையின் கால் மேலும் பாதிப்படைய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இதை செய்துள்ளனர்’’ என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் ஏற்கெனவே பாஜக நிர்வாகி பிரமோத் போரா என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கம்பீர நடைபோட்ட சக்திமான்

கடந்த 2007-ம் ஆண்டு சக்திமான் குதிரையை ரூ.95 ஆயிரத்துக்கு உத்தராகண்ட் காவல் துறையினர் வாங்கி உள்ளனர். அதன்பின்னர் தீவிர பயிற்சி அளித்து டேராடூன் காவல் துறை குழுவில் சேர்த்தனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல பிரச்சினைகளை சக்திமான் சந்தித்து வந்துள்ளது.

தற்போது 13 வயதாகும் சக்திமான் 400 கிலோ எடை கொண்டது. கடந்த 10 ஆண்டுகளாக உத்தராகண்ட் காவல் துறையில் பணியாற்றி விருதும் பெற்றுள்ளது. 3 வயது இருக்கும் போதில் இருந்தே காவல் துறை அணிவகுப்பில் கம்பீரமாக நடைபோட்ட சக்திமானின் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதால் பலரும் சோகம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in