

டெல்லியில் இன்று கரோனா கட்டுப்பாடுகளுடன் ராம்லீலா நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராவணன் உருவபொம்மையை எரிக்கும் நிகழ்வில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பங்கேற்று அம்பெய்தார்.
வட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று ராம்லீலா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராமனின் வரலாற்று நிகழ்வுகளை நாடகமாகவும், நாட்டிய நாடகமாகவும் மக்கள் முன்னிலையில் கலைஞர்கள் நடித்து காண்பிப்பர்.
இறுதியில் தீய சக்திகளாகக் கருதப்படும் அரக்கர்களான ராவணன், இந்திரஜித் ஆகியோர்களின் உருவப் பொம்மைகளை ராமர் அம்பெய்து எரிக்கும் நிகழ்வும் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்படும். டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.
டெல்லியில் இந்த ஆண்டு ராம்லீலா கொண்டாட்டங்கள், கரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் சிறிய அளவில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு மெய்நிகா் முறையில் ராம்லீலா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆண்டு குறைந்த அளவில் கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீதாா்மிக் லீலா குழுவும் ராம் லீலா கொண்டாட்டத்தை இந்த ஆண்டு 10 நாள் விழாவாக கொண்டாடாமல் இன்று ஒரு நாள் மட்டுமே கொண்டாடியது. இறுதி நிகழ்வான ராவணன் உருவபொம்மையை அம்பு எய்து எரிக்கும் நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்று அம்பு எய்தார்.
ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடைவெளி இருக்கும் வகையில், சமூக இடைவெளியை பின்பற்றி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இதுபோலவே பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ராம்லீலா வெகு சிறப்பாக நடைபெற்றது.