

தேசப் பிரிவினையின் வலி, இன்னும் ரணமாக இருக்கிறது. எதிர்காலத்தில் அதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க புதிய தலைமுறையினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுப்பதும், அறிந்து கொள்வதும் முக்கியமானது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 96-வது ஆண்டு விழா மற்றும் விஜயதசமி பண்டிகைக் கொண்டாட்டம் நாக்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வழக்கமாக முக்கிய விருந்தினராக, புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர் அழைக்கப்படுவார். ஆனால், கரோனா பரவலால் கடந்த முறையும், இந்த முறையும் அழைக்கப்படவில்லை. அதேசமயம், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
''இந்த தேசம் சுதந்திரம் பெறுவதற்கு ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகம் செய்துள்ளார்கள். தேசத்தின் பிரிவினையின் வலி இன்னும் ஆறவில்லை. இன்னும் அந்த வலியை உணர்கிறோம். இந்த தேசப் பிரிவினையின் உண்மை வரலாற்றை நாம் அறிய வேண்டும்.
தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மீட்டெடுக்க புதிய தலைமுறை இளைஞர்கள் இந்த வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற தேசப் பிரிவினை இனிமேலும் நடக்கக் கூடாது. ஆதலால், தேசப் பிரிவினை வரலாற்றை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
புதிய தலைமுறை இளைஞர்கள் சார்பற்ற சமூகத்தைப் பற்றியும் தங்களைப்பற்றியும் அறிந்திருத்தல் அவசியம். அதுதான் ஒருங்கிணைந்த தேசத்துக்கான முதல் கட்டம். அதேநேரம் நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்களையும் வரவேற்பது அவசியம்.
ஒன்றுபட்ட தேசத்துக்கும், ஒன்றுபட்ட சுயத்துக்கும் சாவர்க்கரும், யோகி அரவிந்தரும் அழகான விளக்கங்களை அளித்துள்ளார்கள். ஒருங்கிணைந்த இந்து சமூகம் வளர்ச்சி அடையும்போது, பகவத் கீதையையும், வாசுதேவ குடும்பத்தைப் பற்றியும் பேசும். இந்த உலகம் ஒரு குடும்பம். இதை நாம் பின்பற்றினால், உலகின் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்று சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.
போரில்லாத சமூகத்துக்கு எதிராக இருப்போருக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். உலகில் உள்ள சில சக்திகள் இந்தியாவின் வளர்ச்சியை, மேம்பாட்டை, மதிப்புக்குரிய நிலைமையை விரும்பாமலும், எதிரான நிலைமையுடனும் நடக்கிறார்கள். இந்தியாவின் பாரம்பரியங்கள், மதம், தற்கால வரலாறு குறித்து அவதூறு பரப்பும் முயற்சிகளும் நடக்கின்றன. நம் மீதான இந்த தாக்குதல், நுண்ணிய மற்றும் கலாச்சார வடிவில் இருக்கிறது. இதுபோன்று தாக்குதல் நடத்தும் நபர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுகிறார்கள்.
சுதந்திர இந்தியாவின் லட்சியத்தியுடன் தற்போதைய சூழலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சுதந்திரம் முதல் சுய ஆட்சிக்குச் செல்லும் நமது பயணம் இன்னும் முழுமையடையவில்லை. இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் மரியாதைக்குரிய நிலைக்கு உயர்ந்து செல்வதற்கு எதிராகத் தீங்கு விளைவிக்கும் நோக்குடன் உலகில் சில கூறுகள் செயல்படுகின்றன''.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.