

வங்கதேசத்தில் இந்துக் கோயில்கள் அருகே அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தல்கள் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளார் அர்ந்தம் பாக்சி, "வங்கதேசத்தில் பல்வேறு இடங்களிலும் வன்முறைச் சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக வங்கதேச அரசைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.மேலும், அடுத்து வரும் நாட்களில் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் துர்கா பூஜையை எவ்வித இடையூறும் இல்லாமல் கொண்டாட வங்கதேச அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, நானுவார் திகி எனும் பகுதியில் துர்கா பூஜை கொண்டாடப்பட்ட பகுதியில் புனித குரான் நூல் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தலைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, "வன்முறையை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்துக் கோயில் மீதோ அல்லது துர்கா பூஜை பந்தலின் மீதோ ஏதேனும் தாக்குதலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் " என எச்சரித்துள்ளார்