

2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்கு சரி்ந்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றைவிட இந்தியாவில் பட்டினியால் வாடுவார் அதிகரித்துள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் 101வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு, 5வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.
உலகளவில் பட்டினிச் சாவு, சரிவிகித சத்துணவு மக்களுக்குக் கிடைப்பது ஆகியவற்றைக் கண்டறிந்து அறிக்ைக வெளியிடப்பட்டுள்ளது. ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து தயாரித்த அறிக்கையில், இ்ந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதேசமயம், சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு என்பது 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 1998-2002ம் ஆண்டு இந்தியாவில் 5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல் சதவீதம் 17.1 ஆக இருந்த நிலையில் 2016 முதல் 2020ம் ஆண்டில் இது 17.3 ஆகஅதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் உள்ள மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிலும், இந்தியாவில் உள்ள குழந்தைகள் சத்துணவுக் குறைபாடு பிரச்சினைகளால் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சத்துணவு, சரிவிகித உணவு வழங்குவதிலும், உலக பட்டினிக் குறியீட்டிலும் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 76வது இடம், வங்கதேசம் 76, மியான்மர்(71), பாகிஸ்தான்(92) ஆகிய இடங்களில் உள்ளனர். இருப்பினும் இந்தியாவைவிட முன்னேறியிருந்தாலும், சத்துணவு,சரிவிகித உணவுகளை வழங்குவதில் இன்னும் முன்னேற்றம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்தியாவில் 5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் உயிரிழப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், சத்துணவு, சரிவிகித உணவு உணவு கிடைப்பதில்தான் இன்னும் சிக்கல் நீடிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டினிக்கு எதிராக உலக நாடுகள் போராடும் பாதையில் 47 நாடுகள் 2030ம் ஆண்டுக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாது. குறைந்த அளவு பட்டினிக் குறியீட்டை எட்டமுடியாது எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான உணவுப் பாதுகாப்பு பல்வேறு முனைகளில் இருந்து தாக்குதலுக்கு ஆளாகிறது. உள்நாட்டுக் குழப்பம், பிரச்சினைகள், பருவநிலை மாறுபாடு,பொருளாதார, சுகாதார சிக்கல்கள், கரோனா வைரஸ் போன்றவற்றால் பட்டினிக் குறியீட்டின் அளவை அதிகரிக்கிறது.
அதுமட்டுமல்லாமல் நாடுகளுக்கு இடையே வளர்ச்சியில் வேறுபாடு, உள்நாட்டில் பிராந்தியங்களில் சமநிலையின்மை, மாவட்டங்கள், சமூகங்களிடையே சமத்துவமின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பட்டினிக் குறியீடு அதிகரித்துள்ளது.
இந்தியாவை விட மோசமாக 15 நாடுகள் உள்ளன. பப்புவா நியூ கினியா(102), ஆப்கானிஸ்தான்(103), நைஜிரியா(103) காங்கோ(105), மொசாம்பிக்(106),சியா லியோன்(106), தைமூர் லெஸ்டி(108), ஹெய்தி(109),லைபீரியா(110),மடகாஸ்கர்(111), காங்கோ ஜனநாயகக் குடியரசு(112), சாட்(113),மத்திய ஆப்பிரிக்ககுடியரசு(114),ஏமன்(115), சோமாலியா(116) நாடுகள் உள்ளன