

மத்தியபிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டம் பரோட் நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தினந்தோறும் பள்ளி தொடங்கும்போது இறைவணக்கம் பாடப்படும். பின்னர் பாரத் மாதா கீ ஜேஎன்று கோஷங்களை மாணவர்கள் எழுப்புவார்கள். இந்நிலையில் நேற்று இறைவணக்க நிகழ்ச்சியின்போது சில முஸ்லிம் மாணவர்கள் பாரத் மாதா கீ ஜே கோஷத்தை கூறவில்லை என்று தெரிகிறது. இதை பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பைச் சேர்ந்த தலித் மாணவர் பாரத் சிங் ராஜ்புத் (19) என்பவர் கண்டித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த முஸ்லிம் மாணவர்களை, வேறு சில மாணவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.
மாலையில் ராஜ்புத்தும், பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பரோட் பகுதியைச் சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து அடித்து, உதைத்துள்ளனர்.
இதையடுத்து ராஜ்புத், போலீஸில் புகார் கொடுத்துள்ளார். 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராகேஷ் சாகர் கூறும்போது, “மாணவர் ராஜ்புத் வீட்டுக்குதிரும்பும்போது சிலர் வழிமறித்து அடித்துள்ளனர். இதை வீடியோ எடுக்க முயன்ற ஆசிரியரையும் அவர்கள் அடித்துள்ளனர். இதுதொடர்பாக 20 பேர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.- பிடிஐ