

சிறுவயதிலிருந்தே இந்தியாவை தான் வெறுத்ததாக தீவிரவாதி டேவிட் ஹெட்லி கூறியுள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லி (55), தற்போது அமெரிக்க சிறையில் இருக்கிறார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிய ஹெட்லி, சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
மூன்றாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சனால் முன்னிலையில் ஹெட்லியிடம் அப்துல் வகாப் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது ஹெட்லி கூறியதாவது:
சிறுவயதிலிருந்தே இந்தியாவை வெறுத்தேன். அதற்குக் காரணம் 1971 டிசம்பரில் நான் படித்த பள்ளிக்கூடத்தின் மீது இந்திய விமானம் வெடிகுண்டு வீசியது. அதில் என் பள்ளிக்கூடம் சிதிலமடைந்தது. அங்கு பணியாற்றியவர்கள் பலர் பலியாகினர்.
நான் பின்னாளில் லஷ்கர் இயக்கத்தில் சேர இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்திய தாக்குதலுக்கு பழிவாங்க வேண்டும் என நான் உறுதியாக இருந்தேன்.
பால் தாக்கரேவை சந்தித்ததில்லை:
ஹெட்லி மேலும் கூறும்போது, "சிவசேனாவுக்காக அமெரிக்காவில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய முயற்சித்தேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரை அமெரிக்காவுக்கு அழைக்கவும் நினைத்தேன். ஆனால் அது தொடர்பாக பால்தாக்ரேவை சந்தித்ததோ, பேசியதோ கிடையாது" என்றார்.